இந்தோனீசியாவில் ஜி20 நாடுகளின் அமைச்சர்கள்நிலை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை ஜி20 அமைப்பில் இருக்கும் பல நாடுகளும் கண்டிப்பதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
உக்ரேன் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளன.
இந்தோனீசியாவின் பாலி தீவில் ஜி20 நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் இரண்டு நாள் கூட்டம் நடத்தினர்.
ஆனால், உக்ரேன் போர் தொடர்பில் ரஷ்யாவுடன் இணக்கம் இல்லாமல் போனதை அடுத்து கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.
"உலகப் பொருளியல் மீட்சி மெதுவடைந்து இருப்பதாக ஜி20 அமைப்பின் பல உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டன. உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக உலகப் பொருளியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் அந்தச் செயலை ஜி20 நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.
"அந்தப் போர் முடிவுக்கு வரவேண்டும் என்றும் அந்த நாடுகள் கோரிக்கை விடுத்தன," என்று நேற்று வெளியிடப்பட்ட கூட்ட முடிவு அறிக்கையில் இந்தோனீசியா தெரிவித்தது.

