சாதனையாக தேசிய பல்கலை மருத்துவக் கல்லூரி 18 பேரை சேர்த்தது
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு பலதுறை தொழிற்கல்லூரி பட்டதாரிகள் 18 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை ஒரு சாதனை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மருத்துவக் கல்லூரி ஆண்டுக்கு ஏறக்குறைய 300 மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே கல்லூரி ஆண்டு ஒன்றுக்கு ஆறு முதல் ஏழு தொழிற்கல்லூரி பட்டதாரிகளைச் சேர்த்து வந்துள்ளது.
ஆனால், இந்த ஆண்டில் அத்தகைய பட்டதாரிகள் 18 பேர் மருத்துவம் படிக்க சேர்த்துக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது 2007க்கு பிறகு ஆக அதிகம் என்பதை கல்லூரி உறுதிப்படுத்தியது.
அந்தக் கல்லூரி, முதன்முதலாக 2007ல்தான் நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரி பட்டதாரிகள் இரண்டு பேரை சேர்த்துக்கொண்டது.
பலதுறை தொழிற்கல்லூரி பட்டதாரிகளில் அதிகமானவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள். இவர்கள் உயிரியல் மருத்துவம், தாதிமை உள்ளிட்ட தொடர்புடைய பட்டயப் படிப்பு முடித்தவர்கள் என்பதை அந்த மருத்துவக் கல்லூரி சுட்டிக்காட்டியது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மதிப்பீட்டில் அதிகமான தொழிற்படிப்பு மாணவர்களின் செயல்திறன் சிறப்பாக இருந்ததாக கல்லூரித் தலைவர் பேராசிரியர் சோங் யாப் செங் தெரிவித்தார்.
"பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் பொதுவாக நடைமுறைத் தேர்ச்சிகளை எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். செயல் சார்ந்த அறிவுஞானம் உள்ளவர்கள். இது அவர்களுக்கு நல்ல அனுகூலமாக இருக்கிறது," என்று அந்தப் பேராசிரியர் விளக்கினார்.
"மருத்துவக் கல்வியைப் படித்து முடிக்கும் அளவுக்கு மாணவர்களிடம் ஏட்டுக்கல்வி திறமை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமான ஒன்று.
"அதே நேரத்தில் அதற்கு அப்பாற்பட்ட மாணவர்களின் இதர பல சாதனைகளையும் கருத்தில்கொண்டு கல்லூரி முடிவுகளை எடுக்கிறது.
"ஒரு மாணவரின் சமூக சேவை, தலைமைத்துவ பாணி, ஆய்வு, தேசிய சேவை, சரியான நன்னெறிகள் ஆகியவற்றையும் கல்லூரி கவனத்தில் எடுத்துக்கொண்டு மருத்துவப் படிப்பு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
"இதன்மூலம் எதிர்காலத்தில் ஆற்றல்மிக்க, கருணைமிக்க மருத்துவர்களாக உருவாவதை கல்லூரி உறுதிப்படுத்துகிறது," என்று அந்தப் பேராசிரியர் விளக்கினார். மருத்துவப் படிப்புக்குத் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் மாணவர்கள், மாணவர் சேர்க்கை மதிப்பீட்டில் தேர்ச்சி அடைய வேண்டும்
பல நேர்முகத் தேர்வுகளில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும். கணினித் தேர்வையும் அவர்கள் எழுதவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் அதிக பன்மயப் பின்னணி பற்றி கேட்டதற்கு விளக்கம் அளித்த பேராசிரியர் சோங், தன்னுடைய கல்லூரி அனைத்து பின்னணிகளையும் கொண்ட மாணவர்களை வரவேற்று ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
வெவ்வேறு உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த, பலதரப்பட்ட கல்வி பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் தங்களுடன் கொணரும் தேர்ச்சிகள், கண்ணோட்டங்கள் காரணமாக கற்றல் நடைமுறை நன்கு செறிவடைகிறது. அதோடு சக மாணவர்களுடன் கலந்துறவாடல் மேம்படுகிறது என்று அவர் மேலும் விளக்கினார்.
இதனிடையே, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தானும் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதாக தெரிவித்தது.
இப்பல்கலைக்கழகம் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 160 மருத்துவப் படிப்பு மாணவர்களைச் சேர்த்துக்கொள்கிறது.
இந்த ஆண்டில் பலதுறைத் தொழில் படிப்பு தகுதியுடன் கூடிய இரண்டு மாணவர்களை இது சேர்த்துக்கொண்டு இருக்கிறது. சிங்கப்பூர் விளையாட்டு கல்லூரியைச் சேர்ந்த ஒரு பட்டதாரியையும் இது மருத்துவப் படிப்பில் சேர்த்துள்ளது.

