உக்ரேனில் உள்ள ஐரோப்பாவின் ஆகப் பெரிய அணுசக்தி ஆலையில் ரஷ்யா ஆயுதங்களைக் குவிக்கிறது என்றும் அந்த ஆலையில் இருந்து ஏவுகணைகளை வீசி பக்கத்தில் உள்ள வட்டாரங்களை அது தாக்குகிறது என்றும் உக்ரேனின் அணுசக்தி முகவை புகார் தெரிவித்துள்ளது.
ஸாபோரிஸ்சியா என்ற அந்த அணுசக்தி ஆலையில் சூழ்நிலை மிகவும் பதற்றமாக இருக்கிறது என்றும் 500 ரஷ்யப் படையினர் அந்த ஆலையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் அந்த முகவையின் தலைவர் பெட்ரோ கோட்டின் கூறினார்.
அந்த அணுசக்தி ஆலை உக்ரேனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது சில மாதமாகவே ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
ரஷ்யா, சனிக்கிழமை ஏவுகணை மூலம் தாக்கியதில் நிகோபோல் என்ற நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் நிப்ரோ என்ற வட்டாரத்தின் ஆளுநர் ரெஸின்செங்கோ கூறினார்.
இதனிடையே, உக்ரேனில் அடுத்த கட்ட தாக்குதலுக்கு ரஷ்யா ஆயத்தமாகி வருவதாக உக்ரேனிய ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
எல்லாப் பகுதிகளிலும் தன் படைகள் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று மாஸ்கோ முன்னதாக தெரிவித்தது. பல நகர்களில் ரஷ்ய எறிபடைகளும் ஏவுகணைகளும் விழுந்து வெடித்ததில் பலர் கொல்லப்பட்டதாக தலைநகர் கியவ் தெரிவித்தது.
கடல், ஆகாயத்தில் மட்டுமின்றி பல இடங்களில் இருந்தும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது என்று உக்ரேனிய ராணுவ வேவுத்துறை பேச்சாளர் வாடிம் ஸ்கிபிட்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரேனின் கிழக்கு வட்டாரமான டோனட்ஸில் இன்னமும் தன் வசம் இருக்கும் சுலோவியான்ஸ்க் என்ற முக்கியமான நகரின் மீது தாக்குதல் நடத்துவதற்கு தோதாக ரஷ்யா படைகளைக் குவித்து ஆயத்தமாகி வருவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது. கடந்த மூன்று நாள்களில் நகர்ப் பகுதிகளில் ரஷ்ய தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்து இருக்கிறது.

