பிரிட்டனையும் பிரான்சையும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலையைச் சமாளிக்க அந்நாடுகளின் மக்கள் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.
வானிலை மேம்படும்வரை இங்கிலாந்தில் பல பள்ளிகள் மூடப்பட இருக்கின்றன. மருத்துவமனைகள் அத்தியாவசியமற்ற சிகிச்சைகளை ஒத்திவைக்கின்றன. தாதிமை இல்லங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வெப்பநிலை அதிகரித்து வருவதால், பிரிட்டன் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது. வெப்பம் கடுமையாக இருப்பதுடன், முதன்முறையாக அது 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று அங்கு வெப்பநிலை 41 டிகிரி செல்சியசைத் தாண்டும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
இது, பிரிட்டனில் பதிவாகும் ஆக அதிக வெப்பநிலையாகும். இதுவரை அங்கு பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்சியஸ். அது 2019ல் பதிவானதாக பிரிட்டிஷ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பிரான்சைப் பொறுத்தவரை, நாட்டின் வடமேற்குப் பகுதியில் வெப்பநிலை உச்சத்தை எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சீனாவையும் வாட்டி வதைக்கும் கோடைக்கால வெயில்
சீனாவின் பல பகுதிகளிலும் இந்த வாரம் கடுமையான வெப்பத் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதிவரை அது நீடிக்கக்கூடும் என முன்னுரைக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் தெற்குப் பகுதிகளில் ஜூலை 20ஆம் தேதிக்குப் பிறகு வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்று சீன வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

