அமெரிக்காவின் இண்டியானா மாநிலம், கிரீன்வுட் நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கிக்காரனும் அடங்குவான். ஆயுதம் ஏந்திய வழிப்போக்கர் ஒருவர், அவனைச் சுட்டதாக கிரீன்வுட் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 'ரைஃபில்' துப்பாக்கியையும் தோட்டாக்களையும் ஏந்திய ஆடவர் ஒருவன், கடைத்தொகுதியில் உள்ள உணவுக்கூடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினான் என்று கிரீன்வுட் காவல்துறை தலைவர் ஜிம் ஐசன் கூறினார்.
அந்த ஆடவரின் அடையாளத்தையோ அவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணத்தையோ அதிகாரிகள் வெளியிடவில்லை. காயமுற்றவர்களில் 12 வயது சிறுமியும் அடங்குவாள். அவளுடைய முதுகில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் மற்றொருவர் சீரான நிலையில் இருப்பதாகவும் திரு ஐசன் தெரிவித்தார்.
பொதுமக்களுக்குக் கூடுதல் மிரட்டல் இல்லை என்றும் கிரீன்வுட் காவல்துறை, சம்பவ இடத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் மேயர் மார்க் மயர்ஸ் கூறினார்.
"நான் என் வாழ்நாளின் பெரும்பகுதியில் காவல்துறை அதிகாரியாக இருந்துள்ளேன். எனினும், இந்தச் சம்பவம் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது," என்றார் திரு ஐசன்.
துப்பாக்கிக்காரனைச் சுட்டவரை திரு ஐசன் அடையாளப்படுத்தினார். அவர் 22 வயது ஆடவரான அந்த வழிப்போக்கர், சட்டத்திற்கு உட்பட்டு துப்பாக்கியை வைத்திருந்ததாக திரு ஐசன் தெரிவித்தார். திரு மயர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், அந்த வழிப்போக்கரின் செயலைப் பாராட்டினார்.
"துப்பாக்கிக்காரனை சுட்ட அவர், கூடுதல் ரத்தக் களரியைத் தடுத்தார். விரைந்து செயல்பட்ட அவரை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்," என்றார் திரு மயர்ஸ்.

