கொவிட்-19 தாக்கத்தில் இருந்து சிங்கப்பூர் பொருளியல் மீட்சியடைந்து வரும் வேளையில், கூடுதலான ஊழியர்கள் தங்களது சமபளப் பாக்கியை மீட்டுள்ளனர். சரியான அல்லது போதுமான காரணமின்றி வேலையிலிருந்து நீக்கப்பட்டதன் தொடர்பில் குறைவான ஊழியர்கள் புகார் அளித்தனர்.
இத்தகைய புகார்களில் சில, 'இணைய சச்சரவுத் தீர்வு' எனும் இணையவாசல் வழியாக தெரிவிக்கப்பட்டன. எதிர்காலத்தில் வேலை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, இந்த இணையவாசல் செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்படுத்தப்படும்.
'2021 வேலைநியமன தரநிலை அறிக்கை'யை நேற்று வெளியிட்ட மனிதவள அமைச்சு, இதனைத் தெரிவித்தது.
'இணைய சச்சரவுத் தீர்வு' இணையவாசல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை அது வேலை தொடர்பான 430 கோரிக்கைகளைக் கையாண்டுள்ளது. இவற்றில் 32 விழுக்காடு கோரிக்கைகளில், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே தீர்வு காணப்பட்டது.
56 விழுக்காடு கோரிக்கைகளில், சம்பந்தப்பட்ட தரப்பினர் மெய்நிகர் வழியாகச் சந்தித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டனர்.
தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேலை தொடர்பான சச்சரவுகளுக்குத் தீர்வு எட்டுவதைக் குறிக்கும் விதமாக கையெழுத்திட கூடுதல் மேம்பாடுகளுக்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாக வேலைநியமன தரநிலை அறிக்கை குறிப்பிட்டது. மேலும், கோரிக்கைகளைத் தாக்கல் செய்வது, அவற்றைக் கணக்கிடுவது தொடர்பில் உதவும் கணினி மென்பொருளும் அடுத்த ஆண்டிற்குள் தயாராகும்.
ஒட்டுமொத்தமாக, தங்கள் முதலாளிகள் உடனான சச்சரவுகள் குறித்து கடந்த ஆண்டு குறைவான ஊழியர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
உரிய காரணமின்றி தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டது போன்று பல்வேறு வேலை சச்சரவுகளின் தொடர்பில் 5,882 கோரிக்கைகளும் மேல்முறையீடுகளும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் உள்ளூர் ஊழியர்கள் 64 விழுக்காடு கோரிக்கைகளையும் வெளிநாட்டு ஊழியர்கள் எஞ்சியவற்றையும் தாக்கல் செய்திருந்தனர்.
ஊழியர்களின் மொத்த கோரிக்கைகளில் 82 விழுக்காடு பங்கு வகித்த சம்பள கோரிக்கைகள் குறைந்தன. சம்பளப் பாக்கியைப் பொறுத்தமட்டில், ஊழியர்கள் $8.6 மில்லியனை மீட்டுக்கொண்டனர்.
தங்குமிட, உணவுச் சேவைகள், மொத்த விற்பனை, சில்லறை விற்பனைத் துறைகள் மீட்சி அடைந்ததால், சம்பளப் பாக்கி தொடர்பில் குறைவான கோரிக்கைகள் எழுந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.
வெளிநாட்டு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் கணிசமாகக் குறைந்ததையும் அமைச்சு சுட்டியது. கடந்த ஈராண்டுகளில் இந்த விவகாரத்தில் தான் தலையிட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக அது சொன்னது.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாதபோது இதுகுறித்து அதிகாரிகளிடம் முதலாளிகள் முன்கூட்டியே தெரியப்படுத்துமாறு அமைச்சு அறிவுறுத்தி இருந்தது. இதனால் முதலாளிகள் உரிய நேரத்தில் உதவித் திட்டங்களை நாட முடியும். மேலும், சம்பளப் பாக்கி குறித்து அமைச்சிடம் முன்கூட்டியே தெரிவிக்க முடியும்.
இதன் பலனாக, வெளிநாட்டு ஊழியர்கள் முறைப்படி கோரிக்கை வைக்கத் தேவையின்றி ஏறக்குறைய 24,000 பேருக்கு சம்பளம் வழங்க முடிந்ததாக அமைச்சு சொன்னது.

