இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் தனக்கு $7.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய இழப்பு ஏற்பட்டது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இதுவே முதன்முறை.
முதலீட்டு லாபங்கள் குறைந்ததும், வட்டிச் செலவுகள் அதிகரித்ததும், சிங்கப்பூர் நாணய மதிப்பு ஏற்றங்கண்டதும் இழப்பிற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
இதன் விளைவாக, அரசாங்கச் செலவினங்களுக்கான சிங்கப்பூர் தொகுப்பு நிதிக்கு நாணய ஆணையம் பங்களிக்கவில்லை. கடந்த 2020, 2021 நிதியாண்டுகளில் முறையே ஆணையம் அந்நிதிக்கு $2.17 பில்லியனும் $1.07 பில்லியனும் வழங்கியது.
இவ்வாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, சிங்கப்பூரின் அதிகாரபூர்வ அந்நியச் செலாவணிக் கையிருப்பிலும் $4.7 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
முதலீடுகள் மூலம் $4 பில்லியன் லாபம் கிடைத்தபோதும் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு வலுவானது அதை ஈடுசெய்துவிட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு, பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக நான்கு விழுக்காடும், யூரோவிற்கு எதிராக ஐந்து விழுக்காடும், ஜப்பானிய யென்னுக்கு எதிராக ஒன்பது விழுக்காடும் கூடியது.
கடந்த நிதியாண்டில் ஆணையத்தின் மொத்தச் செலவினம் $2.8 பில்லியனாக உயர்வுகண்டது. உள்ளூர் நாணயச் சந்தை நடவடிக்கைகள் மீதான அதிக வட்டிச் செலவுகளே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது.
ஆணையம் நேற்று வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இருந்து ஆணையம் தனது நாணயக் கொள்கைகளைக் கடுமையாக்கி வருகிறது.
நாணய மாற்று விகிதம் வலுவானதாக இருப்பது இறக்குமதிச் செலவுகளைக் குறைக்கும். அதே நேரத்தில், அது சிங்கப்பூரின் ஏற்றுமதியைக் குறைத்து, பொருளியல் வளர்ச்சியையும் குறைத்துவிடும்.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மூலாதாரப் பணவீக்கம் 4% முதல் 4.5% வரை உயரும் என்றும் பின்னர் ஆண்டிறுதிக்குள் அது 3.5% முதல் 4% வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்தார்.
மூலாதாரப் பணவீக்கமானது வீட்டு வாடகைகளையும் தனியார்ப் போக்குவரத்துச் செலவுகளையும் உள்ளடக்குவதில்லை.
"உலகளவில் எரிசக்தி, உணவுப்பொருள் விநியோகத்தில் மேலும் சிக்கல் ஏற்பட்டால் பணவீக்கம் இன்னும் உயர்ந்து, நிலைத்திருக்கலாம்," என்று திரு ரவி மேனன் கூறினார்.
"நீடித்த பொருளியல் வளர்ச்சிக்கு இடையில், இடைக்கால நோக்கில் விலையில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் மத்திய வங்கி 2021 அக்டோபரில் இருந்து நான்கு முறை நாணயக் கொள்கையைக் கடுமையாக்கி இருக்கிறது என்று மூத்த அமைச்சரும் அவ்வங்கியின் தலைவருமான தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் உலகளாவிய பொருளியல் வளர்ச்சி மெதுவடைவது சிங்கப்பூரின் வணிகம் சார்ந்த துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு மேனன் குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மூன்று முதல் ஐந்து விழுக்காட்டிற்குள் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், அது மூன்று முதல் நான்கு விழுக்காட்டிற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

