இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது இன்று தெரிந்துவிடும்.
தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 73, டலஸ் அழகப்பெரும, 63, அனுர குமார திசாநாயக்க, 53, ஆகிய மூவரின் பெயர்கள் அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன.
முன்னதாக, திரு அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில், அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகிக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 255 பேரும் இன்று நடைபெற இருக்கும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்று, புதிய அதிபரைத் தேர்வு செய்வர்.
கடும் பொருளியல் நெருக்கடியால் நொடித்துப்போன இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து, அதிபர் பதவியிலிருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டும் தப்பி ஓடிவிட்டார்.
பிரதமர் ரணிலையும் பதவி விலகச் சொல்லி போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர். அதையேற்று, முதலில் பதவி விலகுவேன் என்று அவரும் அறிவித்தார். ஆனாலும் பதவி விலகாத அவர், தற்காலிக அதிபராகவும் பதவியேற்றுக்கொண்டார்.
இதனிடையே, இலங்கை பொதுஜன முன்னணியின் பெரும்பாலான எம்.பி.க்கள், திரு அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜக்கிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவைப் பிரதமராக நியமிக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

