இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மூவர் போட்டி போட்ட அதிபர் தேர்தலில் அவர் 134 வாக்குகளைப் பெற்றார்.
திரு ரணிலை எதிர்த்து போட்டியிட்ட பொதுஜன முன்னணி தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளும் இடசாரி ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவுக்கு வெறும் மூன்றே வாக்குகளும் கிடைத்தன.
இலங்கை அரசமைப்புச் சட்டப்படி நாட்டின் எட்டாவது அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று வாக்கெடுப்பு முடிந்த பிறகு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அறிவித்தார். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மன்றத்தில் பேசிய திரு ரணில், இந்த வெற்றி தனக்கு ஒரு பெருமை என்றார்.
நாட்டில் கருத்து வேற்றுமைகள் எல்லாம் முடிந்துவிட்டன என்று தெரிவித்த அவர், தன்னுடன் சேர்ந்து பாடுபட்டு நாட்டை இப்போதைய நெருக்கடியில் இருந்து மீட்க முன்வருமாறு அழகப்பெருமவுக்கு அழைப்பு விடுத்தார். திரு ரணில், மன்றத்தில் நேற்று அதிபராக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொள்ளவிருந்தார்.
நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்சேவின் எஞ்சி இருக்கும் பதவிக்காலம் 2024 நவம்பருடன் முடிவடைகிறது. திரு ரணில் அதுவரை நாட்டின் அதிபராக பதவி வகிப்பார் என்று நாடாளுமன்ற நாயகர் மகிந்த அபெவர்தனா கூறினார்.
இதனிடையே, திரு ரணில் அதிபராகி இருப்பதை அடுத்து நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இன்னும் அதிகரிக்கவே செய்யும் என்று அத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு வருபவர்கள் தெரிவித்தனர்.
திரு ரணில் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் நிலைப்பாடு இருக்காது என கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த துமிந்தா நாகமுவா கூறினார்.
இப்போதைய அதிபர் ரணில், ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்க மானவர் என்று இதர போராட்டக் காரர்கள் குறைகூறிவருகிறார்கள். திரு ரணிலை எதிர்த்து நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்ட தாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கை வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியை இப்போது சந்திக்கிறது. அதற்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என்று பல மாதங்களாக நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்தன.
அந்த ஆர்ப்பாட்டங்கள் வன்செயல்களாக மாறின. முடிவில் ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தை இழந்தது. அதிபர் கோத்தபாய இலங்கையைவிட்டு ஓடி சிங்கப்பூரில் இருந்தபடி தனது பதவி விலகலை அறிவித்தார். அதற்கு முன்னதாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் கோத்தபாயவின் அதிகாரபூர்வ இருப்பிடத்திற்குள் நுழைந்து அதை தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.
திரு ரணில் விக்ரமசிங்கவின் சொந்த வீடும் தீக்கிரையானது. அவருடைய அலுவலகமும் தாக்கப்பட்டது. இருந்தாலும்கூட திரு ரணில் பதவி விலகவில்லை.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. நேற்று நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 223 வாக்குகள் பதிவாயின. இரு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. நான்கு பேர் போட்ட வாக்கு செல்லுபடியாகவில்லை எனக் கூறப்பட்டது.
திரு ரணிலுக்கு 73 வயதாகிறது. அவர் இலங்கையின் பிரதமராக ஆறு முறை பதவி வகித்து உள்ளார். கோத்தபாய நாட்டைவிட்டு ஓடியபிறகு திரு ரணில் தற்காலிக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவர் அதிபரானதை அடுத்து தினேஷ் குணவர்த்தனா, 73, புதிய பிரதமராக அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், ராஜபக்சே குடும்பத்தை உறுதியாக ஆதரிப்பவர்.
அதிபராக திரு ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளபோதிலும் அவரும் அதிகாரத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்கார்களின் விருப்பமென தெரிவிக்கப்படுகிறது.
திரு ரணில், திங்கட்கிழமை நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்தார்.

