ஜோகூருடன் கூடிய இணைப்பை சிங்கப்பூர் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் அணுக்க ஒத்துழைப்பை நிலை நாட்டி வருவதில் ஜோகூர் மிக முக்கிய பங்காற்றுவதாகவும் திரு லீ தெரிவித்தார்.
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், தன் துணைவியார் ராஜா சரித் சோஃபியா, பட்டத்து இளவரசர் இஸ்மாயில், அவரின் மனைவியான கலிடா, ஜோகூர் முதல்வர் ஓன் ஹனிஃப் காஸி, இதர அதிகாரிகளுடன் மூன்று நாள் வருகை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.
ஜோகூர் சுல்தான் சிங்கப்பூருக்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும். திரு லீ, நேற்று இஸ்தானாவில் ஜோகூர் சுல்தானுக்கு அதிகாரபூர்வ விருந்தளித்துச் சிறப்பித்தார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது எல்லை கடந்த பயணம் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தானா மேரா படகுத்துறை முனையத்துக்கும் டெசாரு கடற்கரை படகுத்துறை முனையத்துக்கும் இடையில் நேரடி படகுச் சேவை தொடங்கி இருப்பதையும் திரு லீ சுட்டினார்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் வேக ரயில் திட்டம் குறித்த காலத்தில் அமைத்து முடிக்கப்படும் என்றும் அது செயல்பாட்டுக்கு வந்ததும் கடற்பாலத்தில் கூட்டம் குறையும் என்றும் தொழில்துறை, சுற்றுலா ஆகியவை அதிகமாகி இரு நாட்டு மக்களுக்கும் இடையில் அணுக்க உறவு பேணி வளர்க்கப்படும் என்றும் திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்டிஎஸ் ரயில் சேவை 2027 ஜனவரியில் செயல்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. உட்லண்ட்ஸ் நார்த்தில் ஆர்டிஎஸ் முனையம் அமையவிருக்கும் இடத்திற்கு சுல்தான் இப்ராஹிம் இன்று வருகை அளிக்க இருக்கிறார்.
இதனிடையே, நேற்றைய விருந்தில் பேசிய சுல்தான் இப்ராஹிம், தன்னுடைய சிங்கப்பூர் வருகை காரணமாக சிங்கப்பூர்-ஜோகூர் மக்களுக்கு இடையில் ஒத்துழைப்பு மேம்படும் என்றும் தோழமை உறவு மேலும் பலமடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சுல்தான் இப்ராஹிம் அவருடைய துணைவியாரின் பெயர் ஆர்க்கிட் மலருக்கு சூட்டப்பட்டது.
சுல்தான் இப்ராஹிமுடன் சேர்ந்து செயல்பட்டு சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த தான் ஆர்வமுடன் இருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.
சுல்தானின் ஆதரவுடன் சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான உறவுதொடர்ந்து பலமடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட உறவைப் பலப்படுத்த விலைமதிப்பில்லாத தொண்டுகளை ஆற்றி இருப்பதற்காகவும் ஜோகூர் மாநிலத்தின் அமைதி, முன்னேற்றம், செழிப்பிற்குப் பாடுபட்டதற்காகவும் சுல்தான் இப்ராஹிமுக்கு நேற்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

