இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகள் தங்களுடைய போதைப்பொருள் தொடர்பான சட்டங்களைத் தளர்த்தும் ஒவ்வொரு முறையும் போதைப்பொருளுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டம் மேலும் சவால்மிக்கதாகிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார்.
போதைப்பொருளை அறவே சகித்துக்கொள்ள முடியாத போக்கை சிங்கப்பூர் கடைப்பிடிக்கிறது. நல்லவேளையாக, இந்த அணுகுமுறைக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்க தவறிவிடும்போது சமூகங்கள் எதிர்நோக்கக்கூடிய மிகக் கடுமையான விளைவுகளைப் பற்றி அரசாங்கம் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒன்எஃப்எம் 91.3ன் 'தி பிக் ஷோ' என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார்.
"இளையர்கள் உட்பட நம் மக்களுக்கும் சமூகத்துக்கும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி மக்களை இணங்க வைக்கவேண்டிய தேவை இருக்கிறது," என்றார் அமைச்சர்.
கனடா, உருகுவே போன்ற நாடுகளிலும் அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் கஞ்சா சட்டபூர்வமான ஒன்றாக ஆக்கப்பட்டு இருக்கிறது.
கஞ்சாவை மருத்துவ நோக்கத்துக்காகப் பயன்படுத்த சென்ற ஆண்டு மலேசியா அனுமதித்தது. இதேபோன்ற ஓர் அணுகுமுறையை எடுப்பது பற்றிய ஒரு திட்டம் குறித்து இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என்று சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது.
தாய்லாந்து கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை விலக்கிவிட்டது.
இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளின் மக்களில் பலரும் போதைப்பொருள் புழக்கத்திற்கு ஆளாகிவருவதால் சட்டங்களை அமல்படுத்துவதில் அத்தகைய நாடுகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
ஆனால் சிங்கப்பூரில் இப்படிப்பட்ட ஒரு நிலை இல்லை என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
போதைப் புழங்கிகளை குற்றவாளிகளாக நடத்துவதற்குப் பதிலாக அந்தப் பழக்கத்தை அவர்கள் விட்டொழிக்க உதவும் வகையில் சிங்கப்பூரின் சீர்திருத்த முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், போதைப்பொருளை உற்பத்தி செய்கின்ற, கடத்துகின்ற நபர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் தொடர்ந்து இங்கு நடப்பில் இருந்து வருகின்றன.
"இந்த வட்டாரத்தில் உள்ள இதர சில நாடுகளைப் போல, உலகத்தில் வேறு சில நாடுகளைப் போல சிங்கப்பூரில் நிலைமை இருக்காது என்பதை போதைப்பொருள் பெரும்புள்ளிகள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். ஆகையால், இங்கு வருவதை அவர்கள் தவிர்த்துக் கொள்கிறார்கள். நம்மிடம் அவர்கள் பிடி படும்போது அவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்கள்.
"இத்தகைய நடைமுறை காரணமாக சிங்கப்பூருக்குள் வரக்கூடிய போதைப்பொருளின் அளவு கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது," என்று திரு சண்முகம் விளக்கினார்.

