தமிழ்நாட்டின் திருச்சி நகரில் இருக்கும் அகதிகள் சிறப்பு முகாமில், கொச்சியைச் சேர்ந்த தேசிய புலன்விசாரணை முகவை அதிகாரிகள் திடீரென்று நேற்று சோதனை தொடங்கினர்.
அந்த முகாமில் பல்கேரியா, இலங்கை, தென்கொரியா, ரஷ்யா, பிரிட்டன், பங்ளாதேஷ், கென்யா, சூடான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 143 பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் பல புகார்களை ஒட்டி விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு சிறப்பு காவல்துறை பிரிவு அந்த முகாமிற்குப் பாதுகாப்பு வழங்குகிறது.
பல்கேரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் அந்த முகாமில் இருந்து சென்ற ஆண்டு தப்பி ஓடிவிட்டார். 2019ல் நைஜீரியர் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.
திருவனந்தபுரம் அருகே 2021 மார்ச் மாதம் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 துப்பாக்கிகள், 1,000 வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. அதற்கு முன்னதாக இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் கைதானார்.
அவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தியான சலீம் என்பவருக்கும் தொடர்புண்டு என்பது தெரியவந்தது.
சலீம், துபாய், பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வார். சுரேஷ் ராஜன் பெயரில் கோடானுகோடி பணப் பரிவர்த்தனை ஆகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
"இலங்கைக்கு போதைப்பொரு ளும் ஆயுதங்களும் கடத்தப்படுகின்றன. இதில் ராஜனுக்கு முக்கியமான பங்குண்டு. அவருக்கு ஏற்கெனவே விடுதலைப் புலி அமைப்பில் இருந்த பலர் உதவி வருகிறார்கள்.
"இதன் தொடர்பில் அந்தக் கட்டமைப்பில் மேலும் யார் யாருக்குத் தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் சோதனை நடத்தப்படுகிறது.
"முகாமில் இருக்கும் ஏறக்குறைய 20 பேர் புலன்விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களில் சிலருக்கு சலீமுடன் நேரடி தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது," என நேற்றைய சோதனை நடவடிக்கையுடன் தொடர்புடைய தகவல் வட்டாரம் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.