இலங்கையின் பிரதமராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நேற்று அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் நாடு எதிர்நோக்கும் பொருளியல் நெருக்கடியைக் கையாள்வதற்கு அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணி அரசாங்கத்தை 73 வயது திரு விக்ரமசிங்க அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி, அடுத்த சில நாள்களுக்குள் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 30 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை அவர் அமைப்பார் என்று கூறப்படுகிறது.
கடுமையான பாதுகாப்புக்கிடையே நேற்று நாடாளுமன்றக் கட்டடத்தில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா முன்னிலையில் திரு விக்ரமசிங்க தமது பதவிப் பிரமாணத்தை எடுத்ததாக அவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இலங்கையின் தலைமை காவல்துறை அதிகாரியும் உயர் ராணுவ அதிகாரியும் புதிய அதிபரின் பின்னால் நின்றவாறு நாடாளுமன்ற நாயகர் மஹிந்த அபேவர்தனா அருகில் பதவிப் பிரமாணத்தை திரு விக்ரமசிங்க எடுத்தார்.
முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டுச் சென்று தம் அதிபர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து அவரது பதவிக் காலம் முடியும்வரை திரு விக்ரமசிங்க, அதிபர் பதவியில் நீடிப்பார் என்று அறியப்படுகிறது.
இதற்கிடையே, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரைத்தான் திரு விக்ரமசிங்க பிரதமராக நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவிவர, திரு விக்ரமசிங்கயின் பள்ளி நண்பரும் முன்னாள் பொது நிர்வாகத்துறை அமைச்சருமான தினேஷ் குணவர்தன, அடுத்த இலங்கை பிரதமர் ஆவார் என்று கூறப்படுகிறது.
மூன்று வயதிலிருந்து இருவரும் நண்பர்கள் என்றும் கொழும்பு ராயல் கல்லூரியில் இருவரும் ஒன்றாகப் படித்தார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
வர்த்தக தொழிற்சங்கத் தலைவரான திரு குணவர்தன, வெளியேற்றப்பட்ட ராஜபக்சேயின் இலங்கை பொதுஜன கட்சியுடன் (எஸ்எல்பிபி) கூட்டணியில் இருந்த ஒரு சிறிய தேசியவாதக் கட்சியின் பிரதிநிதியாவார்.
"பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள் அமைச்சரவையில் இடம்பெறுவர்," என்று திரு விக்ரமசிங்கக்கு நெருக்கமானவர் தெரிவித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பை அடுத்து புதன்கிழமை மாலை பௌத்த ஆலயம் ஒன்றுக்குச் சென்று வழிபட்ட திரு விக்ரமசிங்க, ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சூளுரைத்தார்.
"ஆட்சியைக் கவிழ்ப்பது, அதிபர், பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமிப்பது போன்றவற்றில் நீங்கள் ஈடுபட முயன்றால், அது ஜனநாயகம் அல்ல, அது சட்டவிரோதம்," என்றார் அவர்.
திரு ராஜபக்சேயின் மாளிகைக்குள் அத்துமீறிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ராஜபக்சே குடும்பத்தின் பிரதிநிதியாக திரு விக்ரமசிங்கவைக் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவர், "ராஜபக்சே குடும்பத்துக்கு நான் நண்பன் அல்ல. நான் மக்களின் நண்பன்," என்றார்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களின் 'கோ-ஹோம்-ரணில்' போராட்டத்தைத் தடையின்றி நடத்துவதற்காக கொழும்பில் உள்ள விஹாரமகாதேவி பூங்காவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் நாடாளுமன்றம் புதிய தொடக்கத்துக்காக 24 மணிநேரம் ஒத்திவைக்கப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

