கொழும்பு காலிமுகத் திடல் "கோட்டா கோ கம'வில் நள்ளிரவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.
நேற்று(ஜூலை 21) நள்ளிரவைத் தாண்டியதும் படைகளின் நடவடிக்கை ஆரம்பமானது.
போராட்டக்காரர்களும் சில பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதிகள் கொண்டுவவரப்பட்டுள்ளன. குறிப்பாக அதிபர் செயலகப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது'
செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் காலிமுகத் திடல் பகுதிக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டுள்ளனர். சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளர். நள்ளிரவு முதல் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தூதர் கண்டனம்
இந்நிலையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினரின் தாக்குதல் நடாத்தியதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தமது டுவிட்டர் பதிவு மூலம் கவலை தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் குறித்த செயல் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று இரவு போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதுடன் அதில் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றூம் அறியப்படுகிறது.
செய்தியாளர்கள் இருவரை காணவில்லை
இந்நிலையில்,பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த போராட்டக்காரர் ஒருவர் பாதுகாப்புத்தரப்பினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு செய்தியாளர்கள் மற்றும் ஒரு சிவிலியன் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

