மலேசியாவின் பேராக் மாநிலம், ஈப்போவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டு இருந்த ஈரடுக்குப் பேருந்து ஒன்று, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் விபத்துக்கு உள்ளானது.
இதில் காயமுற்ற 19 பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த 24 பேரில் ஒருவரான ஆறு வயதுச் சிறுமி மட்டுமே சிங்கப்பூரர் ஆவார். அவருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்தது.
மற்ற பயணிகள் மலேசியர்கள் எனக் கூறப்படுகிறது.
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் டமான்சரா எனும் பகுதியில் இந்தப் பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இது விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
இந்த விபத்து குறித்து பின்னிரவு 12.40 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக மலேசிய குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது. காயம் அடைந்த பயணிகள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தப் பேருந்து அதன் பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பதை மலேசிய ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்று காட்டியது. பேருந்தின் முன்கண்ணாடி சிதைந்து காணப்பட்டது. பேருந்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க தீயணைப்பாளர்கள் அந்தக் கண்ணாடியை உடைத்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேருந்து, ஸ்ரீ மாஜூ எனும் மலேசிய நிறுவனத்துக்குச் சொந்தமானது. சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பேருந்துச் சேவைகளை இது வழங்குகிறது.
கடந்த வாரமும் மலேசியாவில் இதேபோன்ற விபத்து ஒன்று நிகழ்ந்தது. ஜூலை 13ஆம் தேதி அதிகாலை, சுற்றுலாப் பேருந்து ஒன்று லாரியுடன் மோதியது. மலேசியாவின் ஜென்டிங் ஹைலண்ட்ஸ் அருகே உள்ள விரைவுச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
'டிரான்ஸ்டார் டிராவல்' எனும் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தப் பேருந்து, சிங்கப்பூரில் இருந்து ஜென்டிங் ஹைலண்ட்சுக்கு சென்றுகொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த 20 பேரில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.
இந்த விபத்தில் காயமுற்ற இருவர், கோலாலம்பூருக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.