சாங்கி பே பகுதிக்கு அருகிலுள்ள 900 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை மீட்கும் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமலையைவிட 10 மடங்கிற்கும் அதிக பரப்பளவைக் கொண்டுள்ள இந்த நிலத்தின் குறிப்பிட்ட பயன்பாடு குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நேற்று கூறியது.
"நிலத்தை மீட்கும் பணிக்காக சாங்கி பே அடையாளம் காணப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் எதிர்கால நிலப் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய நில மீட்புப் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது," என்று வீவக பேச்சாளர்கள் ஒருவர் சொன்னார்.
நில மீட்புப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாக வீவக விளங்குகிறது. சாங்கி கண்காட்சி மையத்திற்கு அருகே உள்ள இந்தப் பகுதியை மீட்பதற்கான பணி குறைந்தது 10 ஆண்டுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நில மீட்புப் பகுதி முழுவதும் சிங்கப்பூர் எல்லைக்கு உட்பட்டு உள்ளது.
மீட்கப்படும் நிலம், வீடமைப்புக்கு அல்லாமல் அனேகமாக ராணுவ, உள்கட்டமைப்பு, தொழிற்சாலை பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். சாங்கி விமான நிலையத்திற்கும் ராணுவச் செயல்பாடுகளுக்கும் அருகே இது அமைந்துள்ளது இதற்குக் காரணம்.
மீட்கப்படும் இந்த நிலம், உயர்ந்துவரும் கடல் நீர்மட்டத்திற்கு எதிராக சாங்கி ராணுவ விமானத்தளத்தைப் பாதுகாக்கலாம் என்பதை அவர்கள் சுட்டினர்.
இந்தப் பகுதியைக் குடியிருப்புப் பயன்பாட்டிற்காக ஒதுக்குவது அவ்வளவாக பலன் தராது என்று 'இஆர்ஏ ரியால்டி' நிறுவனத்தைச் சேர்ந்த திரு நிக்கலஸ் மாக் சொன்னார்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடும் அறிக்கை ஒன்று இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. சாங்கி பே பகுதிக்கு அருகே நிலத்தை மீட்கும் பணியை மேற்கொள்ள, தாவரப் பகுதிகள் சிலவற்றை அகற்ற வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.
எனினும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நில மீட்புப் பணிகளால் சுற்றுச்சூழலுக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படாது என்று வீவக கூறியது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடும் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தையும் தான் எடுக்கவுள்ளதாக வீவக கூறியது.
சாங்கி பே பகுதிக்கு அருகே நிலத்தை மீட்கும் பணியை மேற்கொள்வதற்கான யோசனை 1991ல் எழுந்தது. நகர மறுசீரமைப்பு ஆணையம் இந்த யோசனையை முன்வைத்தது.
சிங்கப்பூரின் விமான நிலையத்திற்குச் சொந்தமான சாங்கி பகுதி, பெரிய அளவிலான நில மீட்புப் பணிகளுக்கு இருமுறை உட்படுத்தப்பட்டது.
ஏற்கெனவே இருந்த விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக்க, 607 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை மீட்பதற்கு 1975ல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. பின்னர், விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக 1990களில் சாங்கி ஈஸ்ட் பகுதியில் 1,545 ஹெக்டர் பரப்பளவு நிலம் மீட்கப்பட்டதோடு புலாவ் பிரானித் தீவு இடமாற்றம் செய்யப்பட்டது.

