ஆர்ப்பாட்டக்காரர்களை நீக்கிய பாதுகாப்புப் படையினர்

ஆர்ப்பாட்டக்காரர்களை நீக்கிய பாதுகாப்புப் படையினர்

3 mins read
abe46f2a-54c3-4841-ae1b-4f94ff6bc72c
இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் முகாமை அகற்றிய பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மாணவ அமைப்பு ஒன்றைச் சேர்ந்த உறுப்பினரைக் காவல்துறையினர் நேற்று தடுத்து நிறுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

இலங்­கை­யின் மூத்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தினேஷ் குண­வர்­தன, நாட்­டின் புதிய பிர­த­ம­ராக நேற்று பத­வி­யேற்­றார். அவர் பத­வி­யேற்­ப­தற்கு முன்­பாக, அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைப் பாது­காப்­புப் படை­யி­னர் கலைத்­த­னர்.

இலங்கை அதி­ப­ராக ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று முன்­தி­னம் பத­வி­யேற்ற அடுத்த நாள் குண­வர்­தன பிர­த­ம­ராக பதவியேற்றார்.

பொது­ஜன பெர­முன கட்சியைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­ச­ரான குண­வர்­த­னவை ராணுவ அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் அதி­பர் ரணில் பதவிப் பிர­மா­ணம் செய்து வைத்­தார்.

குண­வர்­த­ன­வின் பத­வி­யேற்­புக்கு ஒரு சில மணி நேரத்­துக்கு முன்­ன­தாக, இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­பில் அர­சாங்க வளா­கங்­களில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் முகா­மிட்­டி­ருந்த பகு­தி­களில் பாது­காப்­புப் படை­யி­னர் திடீர் சோதனை மேற்­கொண்­ட­னர். அந்த முகாம்­களின் ஒரு பகு­தியை அப்­புறப்­படுத்­திய அவர்­கள், குறைந்­தது ஒன்­பது பேரைக் கைது செய்­த­னர்.

கல­கத் தடுப்பு உப­க­ர­ணங்­களை அணிந்து, துப்­பாக்­கி­களை வைத்­தி­ருந்த ராணு­வத்­தி­னர், முகாம்­க­ளைக் கிழித்­தெ­றி­வ­தைக் காட்­டும் காட்­சி­கள் ஊட­கங்­களில் வெளி­யா­கின. இலங்­கை­யில் இது­வரை இல்லாத பொரு­ளி­யல் நெருக்­கடி நில­வி­வரும் வேளை­யில், அர­சாங்­கத்­தின் செயல்­பாட்­டைக் கண்­டித்து வீதி­களில் இறங்­கிய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள், கடந்த ஏப்­ர­லில் இந்த முகாம்­களை அமைத்­து இ­ருந்­த­னர்.

"ராணு­வத்­தி­னர், காவல்­து­றை­யி­னர், காவல்­து­றை­யின் சிறப்­புப் படை­கள் ஆகி­ய­வற்­றின் கூட்டு நட­வ­டிக்கை அதி­கா­லை­யில் தொடங்­கி­யது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களி­டம் இருந்து அதி­பர் செய­ல­கத்தை மீட்­டெ­டுப்­பது இதன் நோக்­கம். செய­ல­கத்­தைக் கைப்­பற்ற அவர்­க­ளுக்கு சட்ட உரிமை எது­வும் கிடை­யாது," என்று காவல்­துறை பேச்­சா­ளர் ஒரு­வர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார்.

அதி­பர் பத­வி­யில் இருந்து வில­கிய கோத்­த­பாய ராஜ­பக்­சே­வின் நண்­ப­ராகப் பார்க்­கப்­படும் ரணில் புதிய அதி­ப­ராக பத­வி­யேற்­ற­தைத் தொடர்ந்து, தங்­க­ளுக்கு எதி­ராக பாது­காப்­புப் படை­யி­னர் களத்­தில் இறக்­கப்­ப­டு­வர் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அஞ்­சி­னர்.

நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவுக்குப் பிறகு, நூற்­றுக்­க­ணக்­கான பாது­காப்­புப் படை­யி­னர் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் முகாம்­க­ளைச் சுற்றி­வ­ளைத்து அவற்­றின் ஒரு பகு­தியை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­தாக ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தோர் கூறி­னர்.

அதி­பர் அலு­வ­ல­கத்­திற்கு முன்­னால் இருந்த பிர­தான சாலை­யின் இரு­பு­றத்­தி­லும் அமைக்­கப்­பட்டு இருந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் கூடா­ரங்­கள், விடி­யற்­கா­லை­யில் முற்­றி­லு­மாக அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டன.

பாது­காப்­புப் படை­யி­ன­ரின் இந்த நட­வ­டிக்­கை­யில் குறைந்­தது 50 ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் காய­ம­டைந்­த­தாக ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர். அவர்­களில் பாது­காப்­புப் படை­யி­ன­ரால் தாக்­கப்­பட்ட செய்­தி­யா­ளர்­கள் சில­ரும் அடங்­கு­வர். காய­ம­டைந்­த­வர்­களில் குறைந்­தது இரு­வர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த அதி­ர­டிச் சோத­னையை நேரில் கண்ட ஆர்ப்­பாட்­டக்­காரர்­களில் ஒரு­வ­ரான புத்­திகா அபேரத்ன, 34, "பாது­காப்­புப் படை­யி­னர் எங்­க­ளைப் படு­மோ­ச­மா­கத் தாக்­கி­னர். ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஜன­நா­ய­கம் என்­ன­வென்று தெரி­ய­வில்லை," என்று சொன்­னார்.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யில் இருந்து இலங்­கை­யில் அவ­ச­ர­நிலை நடப்­பில் இருந்து வரு­கிறது. பாது­காப்­புப் படை­யி­னர், அதிபர் செய­ல­கம் முழு­வ­தை­யும் தங்­கள் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது. முன்­ன­தாக, அதி­பர் செய­ல­கத்­து­டன் அதி­பர் மற்­றும் பிர­த­ம­ரின் இல்­லங்­களை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கைப்­பற்றி இருந்­த­னர். நாட்­டை­விட்டு கோத்­த­பாய தப்­பிச்­சென்­ற­தைத் தொடர்ந்து அவர்­க­ளது இல்­லங்­க­ளை­விட்டு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் வெளி­யே­றி­னர்.

அதி­பர் செய­ல­கத்தை நேற்று பிற்­ப­கல் அர­சாங்­கத்­தி­டம் தாங்­கள் ஒப்­ப­டைக்க இருந்­த­தாக ஆர்ப்­பாட்­டத்­திற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­வர்­களில் ஒரு­வர் ராய்ட்­டர்­சி­டம் கூறி­னார். ஆனால், இது­கு­றித்து தனக்­குத் தக­வல் எது­வும் கிடைக்­க­வில்லை என்று காவல்­துறை குறிப்­பிட்­டது.

ஆர்ப்­பாட்­டக்­கார்­களை ஒடுக்­கும் பாது­காப்­புப் படை­யி­ன­ரின் இந்த நட­வ­டிக்கை, நாட்­டின் நிலைத்­தன்­மை­யைச் சீர்குலைத்து­ வி­டக்­கூ­டும் என்று இலங்கை வழக்­க­றி­ஞர் சங்­கம் கூறி­ உள்ளது.