இலங்கை அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் செய்வோருக்கு எதிராக எடுக்கப்படும் எல்லாவிதமான சட்டவிரோத நடவடிக்கை
களையும் உடனடியாகக் கைவிடவேண்டும் என பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடுமாறு அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது.
"இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். மேலும் மக்களுக்குத் தேவைப்படும் பொருளியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈடுபடுவதே இலங்கை அரசாங்கத்தின் உடனடி பணி," என்று 'மனித உரிமைகள் கண்காணிப்பு' என்னும் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
"இலங்கை அரசாங்கம் தனது சொந்த மக்களின் உரிமைகளை நசுக்குவதை ஆதரிக்க மாட்டோம் என அந்நாட்டுக்கு அதன் அனைத்துலகப் பங்காளித்துவ நாடுகள் அழுத்தம் திருத்தமாகக் கூறவேண்டும்," என்றார் திருவாட்டி மீனாட்சி.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றார். சில மணி நேரங்களில் ஆயுதம் ஏந்திய ஏராளமான பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைச் சோதனையிடத் தொடங்கினர்.
அதிபர் மாளிகைக்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த அந்தக் கூடாரங்களில் இருந்தோரை வெள்ளிக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் தடியால் தாக்கினர். இரண்டு ஊடகச் செய்தியாளர்களும் இரண்டு வழக்
கறிஞர்களும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர்.
அத்துடன், போராட்டக்காரர்கள், வழக்கறிஞர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, முதன்முதலாகக் கூடிய ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை, ஒரு வாரத்திற்குள் நாட்டில் வழக்க நிலை திரும்பவேண்டும் என்று வலியுறுத்தியது. அதிபர், பிரதமர் அலுவலகங்கள் பணியைத் தொடங்குவதோடு நாடு முழு
வதும் பள்ளிக்கூடங்களைத் திறக்கவும் வழக்கநிலை திரும்ப வேண்டியது அவசியம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

