தமிழகத்தில் பழங்கால ஐம்பொன் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 29 சிலைகளை அவர்கள் கைப்பற்றி இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வியாழக் கிழமை தஞ்சாவூரில் 14 ஐம்பொன் சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
தஞ்சாவூர் சிவாஜி நகரில் கணபதி என்பவர் 'ஆர்ட் வில்லேஜ்' என்னும் நிறுவனம் மூலம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் சென்றது.
அதனைத் தொடர்ந்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரிடம் கடத்தல் சிலைகள் ஏராளமாக இருப்பதையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப அவற்றை அவர் பதுக்கி வைத்திருப்பதையும் அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து தனிப்படை அதிகாரிகள் 'ஆர்ட் வில்லேஜ்' நிறுவனத்தை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பழமையான 14 உலோகச் சிலைகள் அப்போது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
பெருமாள், ரிஷபத் தேவர், ரிஷபத் தேவ அம்மன், சிவகாமி அம்மன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சிறிய நந்தி உள்ளிட்ட 14 சாமி உலோக சிலைகள் மீட்கப்பட்டன. இவை எந்தக் கோயில்
களிலிருந்து திருடப்பட்டவை என்பது குறித்த ஆய்வு நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கணபதியிடம் சிலைக்கான எந்த ஓர் ஆவணமும் இல்லை என்பதால் அவரிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது நிறுவனத்துக்கு அவ்வப்போது வெளிநாட்டினர் வந்து செல்வது விசாரணையில் தெரிய வந்தது.
ஆசியாவின் 3வது பெரிய சிலை சிக்கியது
இதற்கிடையே, சென்னை அருகே சோழர் கால நடராஜர் சிலை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் மணலி அருகே சாத்தங்காடு என்னும் இடத்தில் பழைய இரும்புகளை விற்கும் கடை ஒன்றில் கைப்பற்றப்பட்ட இந்தச் சிலை ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய ஐம்பொன் சிலை என்று அதிகாரிகள் கூறினர்.
மேலும் இந்தச் சிலை 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது எந்தக் கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
சிலையின் தொன்மையையும் ஐம்பொன் தன்மையையும் அறிய டெல்லி மற்றும் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் உதவி நாடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

