இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேயை
சிங்கப்பூர் கைது செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு ஒன்று கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அது சிங்கப்பூரின் தலைமைச் சட்ட அதிகாரியிடம் புகார் செய்துள்ளது.
2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசி போரின்போது பல போர்க் குற்றங்களுக்குக் கோத்தபாய காரணமாக இருந்ததாக தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை, நீதி அமைப்பு குற்றம் சாட்டியது.
அப்போது கோத்தபாய இலங்கையின் தற்காப்பு அமைச்சராக இருந்தார். அவர் தலைமையின்கீழ் செயல்பட்ட இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக்
கட்டவிழ்த்ததாகக் கூறப்படுகிறது. இறுதி போரின்போது பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் மாண்டதாக நம்பப்படுகிறது. கோத்தபாயவுக்கு எதிராகப் பட்டியலிடப்பட்ட குற்றங்களுக்கு சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்டரீதியாக
நடவடிக்கை எடுக்கலாம் என்று அமைப்பு வாதிட்டுள்ளது.
"உறுதி செய்யப்பட்ட தகவல்
களைக் கொண்டு நாங்கள் கோத்தபாயவுக்கு எதிராகப் புகார் செய்து உள்ளோம். கோத்தபாய தற்போது சிங்கப்பூரில் உள்ளார். சொந்த சட்டம், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கோத்தபாயவைக் கைது செய்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக உண்மை நிலையை பறைசாற்றும் மிக அரிய வாய்ப்பு சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ளது," என்று அமைப்புக்காகப் புகார் கடிதத்தைத் தயார் செய்த வழக்
கறிஞர்களில் ஒருவரான திருவாட்டி அலெக்சாண்டிரா லில்லி கேதர், பெர்லினிலிருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் வழியாக கோத்தபாயவுடன் தொடர்புகொள்ள ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. போர்க் குற்றங்கள் தொடர்பாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை கோத்தபாய முன்பு திட்டவட்டமாக மறுத்தார் என்பது குறிப்
பிடத்தக்கது.

