இந்திய அதிபராகப் பதவியேற்றார் திரௌபதி முர்மு

இந்திய அதிபராகப் பதவியேற்றார் திரௌபதி முர்மு

2 mins read
79820d95-9003-4d4d-b141-adcce19d43b0
இந்தியாவின் 15வது அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டபின் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார் திருவாட்டி திரௌபதி முர்மு. படம்: இபிஏ -

இந்­திய அதி­ப­ராக பத­வி­யேற்ற முதல் பழங்­கு­டி­யி­னப் பெண் என்ற சாத­னையை நேற்று படைத்­தார் திரு­வாட்டி திரௌ­பதி முர்மு, 64.

முன்­னாள் பள்ளி ஆசி­ரி­யை­யான திரு­வாட்டி முர்மு, கடந்த வாரம் நடந்த அதி­பர் தேர்­த­லில் 64% வாக்­கு­க­ளைப் பெற்று வாகை­சூ­டி­னார்.

ஒடிசா மாநி­லத்­தில் பிறந்த சந்­தால் பழங்­குடி இனத்­த­வ­ரான திரு­வாட்டி முர்மு, அதி­பரா­கப் பத­வி­யேற்­கு­முன் டெல்­லி­யி­லுள்ள மகாத்மா காந்தி நினை­வி­டத்­திற்­குச் சென்று வணங்­கி­னார்.

அதன்­பின்­னர் நாடா­ளு­மன்­றத்­தில் பத­வி­யேற்பு உறு­தி­மொழி எடுத்­துக்­கொண்­ட­பின் முதன்­மு­றை­யாக அதி­ப­ராக அவர் உரை­யாற்­றி­னார்.

"இந்­தி­யா­வில் ஏழை­கள் கனவு கண்டு, அதனை நன­வாக்­க­லாம் என்­ப­தற்கு நான் அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பதே சான்று. சிறு­வ­ய­தில் நான் தொடக்­கக் கல்வி பெறு­வதே பெருங்­க­ன­வாக இருந்­தது. இன்று நான் அதி­ப­ரா­கப் பத­வி­யேற்­றுக்­கொண்­டுள்­ளேன். அதி­லும், நாடு 75வது சுதந்­திர தினத்­தைக் கொண்­டா­டும் வேளை­யில் நான் அதி­பரா­கத் தேர்­வா­கி­யி­ருப்­பது பெரு­மி­தம் அளிக்­கிறது.

"நான் அதி­ப­ரா­கப் பத­வி­யேற்­றி­ருப்­பது எனது தனிப்­பட்ட சாதனை அல்ல. அது இந்த நாட்­டி­லுள்ள ஒவ்­வொ­ரு­வ­ரின் சாதனை; ஏழை எளிய மக்­க­ளின் கனவு மெய்ப்­படும் என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் சாதனை," என்று திரு­வாட்டி முர்மு பேசி­னார்.

நாட்­டி­லுள்ள பெண்­கள், இளை­ஞர்­கள் நல­னில் முக்­கி­யத்­து­வம் செலுத்­து­வேன் என்றும் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் நல­னுக்­கா­கப் பாடு­படு­வேன் என்­றும் அவர் கூறினார்.

முன்­ன­தாக, திரௌ­பதி என்­பது தம் பெற்றோர் தமக்குச் சூட்டிய பெயரல்ல என்­றும் 'புத்தி' என்ற தமது பெயர் பிடிக்­காத­தால் தம் ஆசி­ரி­யர் ஒரு­வர் தமக்கு அப்­பெ­ய­ரைச் சூட்­டி­னார் என்­றும் ஓர் ஒரிய மொழி காணொ­ளிச் சஞ்­சி­கைக்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது அவர் கூறி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.