நூறு கோடி ரூபாய் கொடுத்தால் நாடாளுமன்ற மேலவை எம்.பி. பதவி, மாநில ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக உறுதியளித்த மோசடிக் கும்பலை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பணம் கைமாறுவதற்குச் சற்று நேரத்திற்குமுன் சிபிஐ அக்கும்பலைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகத் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டபின் சந்தேகப் பேர்வழிகளை சிபிஐ அடையாளம் கண்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக என்டிடிவி செய்தி கூறியது.
இதன் தொடர்பில் நால்வர்மீது சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கர்மலாக்கார் பிரேம்குமார் பாண்ட்கர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர விட்டல் நாயக், டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா, அபிஷேக் பூரோ ஆகியோர் அவர்களில் சிலர்.
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், மாநில ஆளுநர், அரசாங்க நிறுவனங்கள், அமைச்சுகள், துறைகளில் தலைமைப் பொறுப்பு எனப் பல பதவிகளையும் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து, ஏமாற்றி, பெரிய அளவில் மோசடிசெய்யத் திட்டமிட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது.
"கர்மலாக்கர் பிரேம்குமார் பாண்ட்கருக்கு உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி, அத்தகைய நியமனங்களில் முக்கியப் பங்காற்றும் அரசாங்க உயரதிகாரிகளை அணுக அபிஷேக் பூரா திட்டம் தீட்டினான்," என்று பெயர் வெளியிட விரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் சொன்னதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்பிலான சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) தான் கண்டதாகவும் அதில் ரூ.100 கோடிவரை கொடுத்தால் எம்.பி. பதவி பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து எப்படி அக்கும்பல் ஏமாற்றியது என்ற விவரம் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் என்டிடிவி தெரிவித்தது.
சிபிஐ உயரதிகாரிபோல் நடித்த பாண்ட்கர், மோசடியில் சிக்குவதற்கு ஆள் பிடித்துத் தந்தால் அதிகப் பணம் தருவதாக முகம்மது ஐஜாஸ் கான் உள்ளிட்ட மற்ற சந்தேகப் பேர்வழிகளிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது.
"அப்படி எவரேனும் சிக்கினால், அவரைக் கவர்ந்து, தங்களது வலையில் வீழ்த்தும்விதமாக, அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை உரையாடலின்போது பயன்படுத்துவார்கள்," என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சிபிஐ உயரதிகாரிபோல் நடித்த பாண்ட்கர், தனக்குத் தெரிந்தவர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளுமாறு அல்லது வழக்கு விசாரணைகளில் குறுக்கிடும் வகையில் காவல் நிலைய அதிகாரிகளை மிரட்டிவந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

