ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, இதற்குமுன் இல்லாத வகையில் நேற்று 5,450ஆக உயர்ந்துவிட்டது என்று அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகின்றன.
அதிகம் பரவக்கூடிய ஓமிக்ரான் கொரோனா கிருமியின் புதிய துணைத் திரிபுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பிஏ.4 மற்றும் பிஏ.5 துணைத்திரிபுகளால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்திரிபுகள், தடுப்பூசி அல்லது முந்திய தொற்றின்மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலைத் தவிர்க்க வல்லவை எனச் சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, பிஏ.5 திரிபானது பெரியம்மை போன்று தொற்றும் திறனைக் கொண்டிருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 தொற்றால் அன்றாட உயிரிழப்பும் கூடியுள்ளது. முதன்முறையாகக் கடந்த சனிக்கிழமை நூற்றுக்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாயின.
கொவிட்-19 பரவலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பல முதியோர் பராமரிப்பு நிலையங்களில் ஆட்பற்றாக்குறை நிலவுவதால் அங்கெல்லாம் தற்காப்புப் படையினரின் ஆதரவு வரும் செப்டம்பர் மாத இறுதிவரைக்கும் நீட்டிக்கப்படுவதாகத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர் மார்லஸ் அறிவித்தார். "இப்போதைய சூழலில் அதுதான் சரியான நடவடிக்கை," என்றார் திரு மார்லஸ்.
மருத்துவமனைகளின் முன்களப் பணியாளர்களில் பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது, சுகாதாரப் பராமரிப்பு நெருக்கடியை மோசமாக்கியுள்ளது.
கடுங்குளிர் காலத்தில் கொவிட்-19 கிருமியும் சளிக்காய்ச்சல் கிருமியும் பரவுவதால், உட்புறங்களிலும் முகக்கவசம் அணியுமாறும் உடனே கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலைசெய்ய அனுமதிக்கும்படி தொழில் நிறுவனங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் மும்மடங்காக அதிகரிப்பு: ஐநா தகவல்
இதனிடையே, கடந்த ஆறு வாரங்களில் ஐரோப்பாவில் கொவிட்-19 பாதிப்பு மும்மடங்காக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. இது, உலகின் மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவு.
ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் விகிதமும் இரட்டிப்பாகியுள்ளது என்றும் அதே நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான பாதிப்புகளுக்கு பிஏ.5 ஓமிக்ரான் துணைத்திரிபே காரணம். ஆயினும், பாதிப்பு கடுமையாக இல்லாததாலும் உயிரிழப்பு அதிகமாக இல்லாததாலும் ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவில்லை.
இவ்வேளையில், ஜப்பானில் அன்றாட தொற்று பாதிப்பு முதன்முறையாகக் கடந்த வாரம் 200,000ஐத் தொட்டுவிட்டது என்று 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

