இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் வந்த ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது.
அவர் சிங்கப்பூரில் அடைக்கலம் நாடவில்லை, சிங்கப்பூர் அவருக்கு அடைக்கலௌம் கொடுக்கவில்லை என்று சிங்கப்பூர் அரசு முன்னர் தெளிவுபடுத்தியிருந்தது. அவர் தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் வந்திருந்ததாகவும் கூறப்பட்டது. 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்த கோத்தபாயவின் விசா நாளை முடிவடையவுள்ள நிலையில் அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
பதவி இழந்த முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே விரைவில் இலங்கை திரும்புவார் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு பெரும் புரட்சி செய்ததன் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிய கோத்தபாய சிங்கப்பூரில் தங்கி உள்ளார். கோத்தபாய விரைவில் நாடு திரும்புவார் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் பன்டுல குணவர்த்தன கூறியிருந்தார்.
"கோத்தபாய நாட்டைவிட்டு ஓடியதாகவோ ஒளிந்திருப்பதாகவோ நான் நம்பவில்லை. உண்மையில் முறையான அதிகாரத்துவ விதிகளைப் பின்பற்றி அவர் வெளிநாடு சென்றிருக்கிறார்," என்றும் டாக்டர் குணவர்த்தன தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜப்க்சேயைக் கைது செய்ய வேண்டும் என்று சில நாள்களுக்கு முன்பு சிங்கப்பூரின் தலைமை சட்ட அதிகாரியிடன் குற்றவியல் புகார் அளித்துள்ளது ஓர் அனைத்துலக மனித உரிமைக் குழு.
தென் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்ட 'தி இண்டர்னேஷனல் ட்ரூத் ஆத் ஜஸ்டிஸ் புரொஜெக்ட்' (The International Truth and Justice Project - ITJP) எனும் மனித உரிமைக் குழு திரு ராஜபக்சே 2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிய பெரும் மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்ததாக அந்தக் குழு புகார் அளித்திருந்தது.

