பிலிப்பீன்சை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பீன்சை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2 mins read
43ede6e3-2af6-4078-8897-6eb591fd8f5d
பிலிப்பீன்சின் லா டிரினிடாட் எனும் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடம் ஒன்றுக்கு வெளியே மீட்புப் பணியில் ஈடுபடும் அவசரகாலப் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

குறைந்தது ஐவர் மரணம்; 60க்கும் மேற்பட்டோர் காயம்

பிலிப்­பீன்­சின் வடமாநி­லங்­களை நேற்­றுக் காலை உலுக்­கிய சக்தி­வாய்ந்த நில­ந­டுக்­கம், அப்­ப­கு­தி­களில் பெருத்த சேதத்தை ஏற்­படுத்­தி­யுள்­ளது.

டசன் கணக்­கான நிலச்­சரிவு­களை ஏற்­ப­டுத்­திய நில­நடுக்­கம், வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தேவா­ல­யங்­கள் உட்­பட 170க்கும் அதி­க­மான கட்­ட­டங்­க­ளுக்கு பெருஞ்­சே­தம் விளை­வித்­து உள்ளது.

நில­ந­டுக்­கத்­தால் குறைந்­தது ஐவர் உயி­ரி­ழந்­த­னர், 60க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­தாக குடிமைத் தற்காப்பு அலுவலகம் தெரிவித்தது.

ரிக்­டர் அள­வில் 7 எனப் பதி­வான நேற்­றைய நில­ந­டுக்­கம், 1990ல் ஏற்­பட்ட மற்­றொரு நில­நடுக்­கத்­தின் நினைவ­லை­களைக் கொண்டு வந்­தது. அந்த நில­நடுக்­கத்­தால் அர­சாங்­கப் பள்ளி­யும் ஹோட்­ட­லும் கவிழ்ந்­த­தில் 1,600க்கும் மேற்­பட்­டோர் உயி­ர் இழந்­த­னர்.

இம்­முறை உயிர்ச்­சே­தம் அவ்­வ­ளவு அதி­க­மாக இருக்­காது என ஆரம்­ப­கட்ட தக­வல்­கள் குறிப்­பிட்­டன. எனினும், 1990 நில­ந­டுக்­கத்­தால் ஏற்­பட்ட கிட்­டத்­தட்ட அதே அளவு பொருட்­சே­தம் இம்­மு­றை­யும் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் எனத் தெரி­கிறது.

நில­ந­டுக்­கம் உள்­ளூர் நேரப்­படி காலை 8.43 மணிக்கு ஏற்­பட்­ட­தாக பிலிப்­பீன்ஸ் எரி­ம­லை­யி­யல், நில­ந­டுக்­க­வி­யல் கழ­கம் குறிப்­பிட்­டது. மலைப்­ப­கு­தி­கள் அதி­கம் உள்ள அப்ரா மாநி­லத்­தின் டொலொ­ரஸ் பகு­திக்கு தென்­கி­ழக்கே 11 கிலோ­மீட்­டர் தூரத்­தில் நில­ந­டுக்­கம் மையம் கொண்­டது.

"இந்த நில­ந­டுக்­கத்தை நாங்­கள் கடு­மை­யா­ன­தா­கக் கரு­து­கி­றோம். இத­னால் பலத்த சேதம் ஏற்­பட்­டி­ருக்­கும் என நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம்," என்று கழக இயக்­கு­நர் ரெனாட்டோ சொலி­டம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

நில­ந­டுக்­கத்­தின் தாக்­கம், 300 கிலோ­மீட்­டர் தூரத்­தில் உள்ள தலை­ந­கர் மணிலா வரை உண­ரப்­பட்­டது. மெட்ரோ மணி­லா­வில் உள்ள உயர்­மா­டிக் கட்­ட­டங்­கள் நில­ந­டுக்­கத்­தால் அதிர்ந்­தன. அலு­வ­லக, அர­சாங்­கக் கட்­ட­டங்­களில் இருந்து ஊழி­யர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர். ரயில்வே சேவை­யும் பள்ளி வகுப்­பு­களும் ரத்து செய்­யப்­பட்­டன.

நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­போது தம் அலு­வ­ல­கத்­தில் சந்­திப்பு ஒன்­றில் தாம் பங்­கேற்று இருந்­த­தாக பிலிப்பீன்ஸ் அதி­பர் ஃபெர்டி­னண்ட் மார்­கோஸ் ஜூனி­யர் கூறி­னார்.

அப்ரா மாநி­லத்­தி­லும் லுஸோன் தீவின் வட­ப­கு­தி­க­ளில்­தான் நில­நடுக்­கத்­தால் அதிக பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

நில­ந­டுத்­தால் 15 மாநி­லங்­கள், 15 நகர்­கள், 280 சிறு நகர்­களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்­சர் பெஞ்­ச­மின் அபா­லோஸ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

சாலை மார்க்­க­மாக இந்­தப் பகு­தி­க­ளைச் சென்­ற­டை­வது தற்­போது சவா­லாக உள்­ளது. நில­நடுக்­கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள சேதத்­தால் நூற்­றுக்­க­ணக்­கான சாலை­கள் போக்­கு­வ­ரத்­துக்கு மூடப்­பட்டு இருப்­ப­தும் நிலச்­ச­ரி­வு­கள் ஏற்­படும் அபா­யம் நில­வு­வதே இதற்­குக் கார­ணம். அப்ரா மாநி­லத்­தில் குறைந்­தது 58 நிலச்­ச­ரி­வு­கள் ஏற்­பட்­ட­தாக திரு அபா­லோஸ் குறிப்­பிட்­டார். அந்த மாநி­லத்­தில் உள்ள மருத்­து­வ­மனை ஒன்­றின் ஒரு பகுதி இடிந்து விழுந்­த­த­தைத் தொடர்ந்து அதி­லி­ருந்­த­வர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

பிலிப்­பீன்­சில் நேற்று ஏற்­பட்ட நில­ந­டுக்­கம், பல ஆண்­டு­களில் இல்­லாத அளவு ஆகக் கடு­மை­யா­ன­தாக பதி­வா­னது.

அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தூதர்கள், பிலிப்பீன்ஸ் மக்களுக்கு பிரார்த்தனைகளையும் ஆதரவையும் வழங்கினர்.

அப்ரா மாநி­லத்­தை­யும் பாதிக்­கப்­பட்­டுள்ள பிற பகு­தி­க­ளை­யும் தாம் இன்று பார்­வை­யிட இருப்­பதாக அதி­பர் மார்­கோஸ் கூறி­னார்.