வேலையிடப் பாதுகாப்பில் உயர் தரநிலையை சிங்கப்பூர் மீண்டும் எட்ட உதவ, முதாளிகளும் ஊழியர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாண்டின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருது நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு 1,500 பேர் முன்னிலையில் உரையாற்றிய அவர், "வேலையிடப் பாதுகாப்பில் நாம் மீண்டும் உயர் தரநிலையை எட்ட வேண்டும் என்பதே உங்களிடம் நான் முன்வைக்கும் வேண்டுகோள். அப்போதுதான் நம் ஊழியர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இல்லம் திரும்ப முடியும்," என்றார்.
இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்கள் என மொத்தம் 31 பேர் வேலையிட விபத்துகளில் உயிர் இழந்தனர்.
2016க்குப் பிறகு இதே காலகட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்து இருப்பது இதுவே முதன்முறை. 2020 முழுவதுக்கும் பதிவாகி இருந்த 30 வேலையிட மரணங்களையும் இது விஞ்சிவிட்டது. கடந்த ஆண்டு 37 வேலையிட மரணங்கள் ஏற்பட்டன.
"இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்கள் நம் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்துள்ளன. ஆனால், இதில் மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், வேலையிட மரணங்களில் பலவும் எளிதில் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று டாக்டர் டான் கூறினார்.
அண்மையில் வேலையிட விபத்துகள் அதிகரித்து இருப்பது குறித்து வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் தலைவர் ஜான் இங் வேதனை தெரிவித்தார். என்றாலும், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருதுகளுக்கான தகுதிக்கூறு மேலும் கடுமையாக்கப்பட்டாலும், மன்றத்திற்குக் கிடைத்த விண்ணப்பங்கள் தமக்கு ஊக்கமளிப்பதாக அவர் சொன்னார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை மன்றத்துக்குக் கிடைத்த விண்ணப்பங்கள் இருமடங்கு அதிகம். குறிப்பாக நிதி, காப்புறுதி, விருந்தோம்பல் துறைகளில் இருந்தும் மன்றத்துக்கு விண்ணப்பங்கள் வந்துசேர்ந்தன.
இதற்கிடையே, கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழல் தொடங்கியதில் இருந்து வேலையிடங்களில் ஊழியர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் உதவித் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் நேற்று கூறினார்.
இதுகுறித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், "உடல்நலத்துக்கு அளிக்கப்பட்டு வரும் அதே அளவு முன்னுரிமை, மனநலனுக்கு அளிக்கப்பட வேண்டும். வேலையிடங்களில் ஊழியர்களின் மனநலனை மேம்படுத்த ஒன்றுபட்ட முயற்சி எடுக்கப்படுவதன் மூலம் வேலையிட விபத்துகளையும் காயங்களையும் நம்மால் குறைக்க முடியும்," என்றார்.
இவ்வாண்டின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருது நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட 235 நிறுவனங்கள், தனிநபர்களில் கெப்பல் லேண்ட் நிறுவனமும் ஒன்று.

