பொதுத்துறை அதிகாரிகள் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் சிங்கப்பூர் அரசாங்கம் தொடர்பில் மொத்தம் 178 தரவுக் கசிவுச் சம்பவங்கள் இருந்ததாகப் புகார் அளித்திருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டின் 108 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 65% அதிகரிப்பாகும்.
இருப்பினும், தரவுக் கசிவு சம்பவங்கள் அனைத்தும் 'நடுத்தர' அல்லது 'குறைந்த' அளவு கடுமை யானவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தனிநபர் தரவுப் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட மூன்றாவது வருடாந்திர அறிக்கை தெரிவித்துள்ளது. அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் (எஸ்என்டிஜிஓ) இந்த அறிக்கையை வெளியிட்டது.
சிக்கலான அல்லது விரும்பத்தகாத விளைவுகளால் ஓர் அரசாங்க அமைப்பு பாதிக்கப்படும்போதும் தனிநபர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் மிதமான அசௌகரியம் நேரும்போதும் அதனை 'நடுத்தர' கடுமை அளவு என்று எஸ்என்டிஜிஓ விளக்கியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் தொடங்கி இவ்வாண்டு மார்ச் வரை கடுமையான தரவுக் கசிவு சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பையோ பொதுமக்களின் நம்பிக்கையையோ குலைக்கும் வகையில் அமையும் சம்பவங்கள் கடுமையானவை எனக் கூறப்படுகிறது. தனிநபருக்கு மரணம், கடுமையான உடல்ரீதியான, நிதி தொடர்பான அல்லது மனரீதியான பாதிப்புகள் நேர்வதும் கடுமையானவை என வகைப்படுத்தப்படுகின்றன. இதுவரை 2018ஆம் ஆண்டில் நடந்த இரு சம்பவங்கள்தான் கடுமையான தரவுக் கசிவு தொடர்பானவை என்றும் கூறப்பட்டது.
சுகாதார அமைச்சின் 'எச்ஐவி' தரவுத் தளத்தில் இருந்த 14,200 நோயாளிகளின் ரகசியத் தரவுகளும் அரசாங்க நீதிமன்றத்தின் இணையத் தளத்தில் இருந்த 223 வழக்குகள் பற்றிய கோப்புகளும் அனுமதியின்றி வெளியிடப்பட்டதே அவ்விரண்டு கடுமையான தரவுக் கசிவு சம்பவங்களாகும்.
இந்நிலையில் பதிவான 178 தரவுக் கசிவு சம்பவங்களில், அரசாங்கத் தரவுப் பாதுகாப்பு தொடர்பு நிலையத்தின் இணையவாசல் வழியாக பொதுமக்கள் புகார் அளித்தவை 14.
தரவுப் பரிமாற்றமும் தரவுப் பயன்பாடும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் தனியார் துறை எதிர்நோக்கும் தரவுக் கசிவு சம்பவங்கள் போன்று பொதுத்துறையிலும் தரவுக் கசிவு அதிகரித்திருப்பதை பிரதிபலிப்பதாக உள்ளது என்று எஸ்என்டிஜிஓ குறிப்பிட்டது.
தனியார் அமைப்புகளுக்கு எதிராக, கடந்த ஆண்டில் மட்டும் தனிநபர் தரவு மீறல் தொடர்பில் உள்ளூர்வாசிகளிடமிருந்து 6,700 புகார்கள் கிடைத்ததாக எஸ்என்டிஜிஓ தெரிவித்தது. இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 4,500ஆகவும் 2020ஆம் ஆண்டில் 6,100ஆகவும் இருந்தது.
இதற்கிடையே, தனது பாதுகாப்புச் செயல்முறையில் 24 பெரும் மேம்பாடுகளை அமல்படுத்துவதில் பொதுத்துறை இறங்கியுள்ளது. குடிமக்களின் தனிநபர் தரவு மேலும் அதிக பாதுகாப்பைப் பெற $1 பி. முதலீட்டுத் திட்டத்தின் ஓர் அங்கம் இது. இதன்படி பயனர் கணக்குகள் பயன்படுத்தப்படாத நிலையில் செயலிழத்தல், ரகசியத் தகவல்களைப் பிரதியெடுப்பது போன்ற அபாயகரமான பயனர் செயல்களைக் கண்டறிவதுடன் அவற்றைத் தடுப்பது ஆகியவை மேம்பாடு கண்டுவரும் அம்சங்களாகும்.

