இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவின்கீழ் அவசரநிலை சட்டத்தை இலங்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும். இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு நடந்ததை அடுத்து அவசரநிலை சட்டம் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும்.
இதன்படி ராணுவப் படையினரும் காவல்துறையினரும் மக்களிடம் விசாரணை நடத்தவும் அவர்களைத் தடுத்து வைக்கவும் கைது செய்யவும் முழு அதிகாரத்தைப் பெறுகின்றனர். முன்னாள் இலங்கை அதிபரான கோத்தபாய ராஜபக்சேக்கு எதிராகத் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வன்முறையற்ற பொது ஆர்ப்பாட்டங்களில் மக்கள் கலந்துகொள்வதை இலங்கை அரசாங்கம் ஆதரித்தாலும் ஜனநாயகத்திற்கு மிரட்டல் அளிக்கும் 'எந்த ஒரு பயங்கரவாதச் செயலையும்' பொறுத்துக்கொள்ளாது என்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் புதிதாகப் பதவி ஏற்ற இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். திரு ராஜபக்சே மீண்டும் நாடு திரும்ப உள்ளார் என்ற தகவலுக்கு இடையே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கவும் அவசரகால சட்டத்தை அமல்படுத்தவும் இலங்கை அரசு முனைந்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் திரு ராஜபக்சே, மீண்டும் இலங்கை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சட்டமன்றப் பேச்சாளர் பந்துலா குணவர்த்தனே கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆர்ப்பாட்ட இயக்கத்தின் தலைவர்கள் தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று உறுதியளித்து உள்ளனர். திரு விக்ரமசிங்க பதவி விலகக் கோருவதைத் தாங்கள் தொடரப் போவதாகவும் கூறினர்.
இந்நிலையில், அடுத்த மாதம் 9ஆம் தேதியன்று புதிதாக ஆர்ப்பாட்டத்தில் இறங்குமாறு சமூக ஊடகங்களில் பல்வேறு அழைப்புகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. அவசரநிலை சட்டம், தன் பாதுகாப்பைக் கருதியே திரு விக்ரமசிங்க பிரகடனப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

