இரு வெளிநாட்டு ஊழியர்களை அவதூறாகப் பேசியதுடன் அவ்வாறு பேசுவது தனது 'அரசியலமைப்பு உரிமை' என்றும் கூறிய லீ போ கியன், 56, என்பவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
திரு ரத்னசிங்கம் ஜதீசன், திரு கிருஷ்ணன் கார்த்திகேயன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதியன்று தோ பாயோ லோரோங் 5ல் இணைப்புப் பாதை ஒன்று கட்டப்படுவதன் தொடர்பில் அளவு எடுத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அப்போது மழை பெய்யத் தொடங்கவே இருவரும் ஓரிடத்தில் ஒதுங்கினர். அங்கு அருகே லீ இருந்ததாகவும் இருவரையும் நோக்கி அவர் அவதூறுச் சொற்களைச் சொல்லத் தொடங்கியதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் இருவரையும் லீ அணுகிய சமயத்தில் தன் மூக்கு, வாய் பகுதிகளை முகக்கவசம் கொண்டு மூடாமல் இருந்ததாகவும் அறியப்படுகிறது.
லீ திட்டியதை திரு ரத்னசிங்கம் தமது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்திருந்தார்.
லீ ஒரு கட்டத்தில், "நீங்கள் எங்கள் நாட்டுக்குள் நுழைந்தது தவறு.. இந்த அரசாங்கமும் சட்டவிரோதமானது. உங்களை வெளியேற்றுவோம்," என்று கூறிஉள்ளார்.
'சிங்கப்பூருக்கு உங்களை பிடிக்காது', 'எங்காவது தூரமாகப் போய்விடுங்கள்' என இரு நபர்களையும் நோக்கித் தான் கூறியதாக லீ நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். சிங்கப்பூர் அரசாங்கம் இருவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றும் என்றும் தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்திற்கு முன்னால் இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் லீக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் திரு ரத்னசிங்கம், திரு கிருஷ்ணன் இருவரும் லீயை நோக்கித் தகாத வார்த்தைகள் ஏதும் கூறவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.
லீயின் வசைப் பேச்சால் தங்களுக்குக் கவலையும் மன அழுத்தமும் ஏற்பட்டதுடன் அவமானமாக இருந்ததாகவும் திரு கிருஷ்ணன், திரு ரத்னசிங்கம் ஆகிய இருவரும் அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்திருந்தனர்.
வெளிநாட்டவரால் சிங்கப்பூரில் நெரிசலும் குற்றச்செயல்களும் அதிகரித்திருப்பதாகக் கூறி, இதனால் இதுபோன்ற அவதூறு சொற்களைப் பயன்படுத்தத் தனக்கு உரிமை உண்டு என்று லீ கூறியிருந்தார்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட இருவரும் குற்றச் செயல்கள் புரிந்துள்ளதற்கு ஆதாரம் எதையும் லீயால் காட்ட முடியவில்லை.

