இந்தியாவின் உத்தரகாண்ட்
மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழ்ந்த வினோத சம்பவம் அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று கிட்டத்தட்ட 15 மாணவிகளும் ஒரு மாணவனும் திடீரெனத் தன்னிலை மறந்து தரையில் உருண்டு கதறி அழுததைப் பார்த்த ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்தனர்.
அந்த மாணவர்களிடம் ஒருவித நடுக்கம் தென்பட்டதாகக் கூறப்
படுகிறது.
மாணவிகள் பலர் தலைவிரி கோலமாக காதைப் பிளக்கும் அளவுக்கு அலறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் செய்தி
யாளர்களிடம் தெரிவித்தனர்.
அவர்களில் சிலர் தங்கள் தலையைச் சுவரில் முட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களைச் சமாதானப்படுத்த ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் எவ்வளவு முயன்றும் அவை அனைத்தும் துளிகூட பலனளிக்கவில்லை.
நிலைமை கட்டுக்கடங்காமல் போக, மாணவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கு விரைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நிலையைப் பார்த்து நிலைகுலைந்தனர்.
தங்கள் பிள்ளைகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்ற முடிவுக்கு வந்த பெற்றோர் உள்ளூர் பூசாரியைப் பள்ளிக்கு அழைத்தனர்.
பூசாரி அங்கு வந்து சில பூசைகளைச் செய்த பிறகே மாணவர்கள் மீண்டும் சுயநினைவுக்கு வந்ததாகவும் நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும் அந்த உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருவாட்டி விமலா தேவி கூறினார்.
இந்த விவகாரம் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்
தினம் அதிகாரிகளும் மருத்துவர்களும் அப்பள்ளிக்குச் சென்றபோது அந்த விசித்திர சம்பவம் மீண்டும் அரங்கேறியது.
"பள்ளி வளாகத்தில் ஏதோ தீய சக்தியின் நடமாட்டம் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர் நம்புகின்றனர்.
"அதை விரட்டியடிக்க பள்ளியில் சிறப்புப் பூசைகளையும் ஹோமங்களையும் நடத்த வேண்டும் என்று அவர்கள் அடித்துக்
கூறுகின்றனர்.
"மாணவர்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அதற்காக நாங்கள் எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். அது பூசைகள் நடத்துவதாக இருந்தாலும் சரி, மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதாக இருந்தாலும் சரி," என்று திருவாட்டி விமலா தேவி கூறினார்.
மாணவர்களின் இந்த வினோதச் செயலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், 'மேஸ் ஹிஸ்டீரியா' எனப்படும் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஆவேச உணர்வு இந்த மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று மனநல மருத்துவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

