அக்டோபர் 16ல் தீமிதித் திருவிழா, பாத ஊர்வலத்துக்கு அனுமதி

அக்டோபர் 16ல் தீமிதித் திருவிழா, பாத ஊர்வலத்துக்கு அனுமதி

1 mins read
14e78abd-fefd-47a9-a94d-cbac79568708
கடந்த 2021ஆம் ஆண்டு முதன் முதலாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தீக்குழி இறங்கினர். படம்: திமத்த் டேவிட் -

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இவ்வாண்டு அக்டோபர் 16ஆம் தேதி நிகழவுள்ளது. ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு இவ்வாண்டு பாத ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து அறக்கட்டளை வாரியமும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. கடந்த ஈராண்டுகளாக ஒரு மாத கால விழாவாக நடைபெற்ற தீமிதித் திருவிழா இம்முறை வழக்கமான மூன்று மாத விழாவாக அனுசரிக்கப்படும்.

அதன்படி தீமிதித் திருவிழாவுக்கான கொடியேற்றம், வரும் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 1ஆம் தேதி இடம்பெறும்.

ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கும் இடையிலான பக்தர்களின் பாத ஊர்வலத்துக்கு இம்முறை நடைபெறும் ஆனால் அதில் பங்கேற்போரின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்படும். பக்தர்கள் பால்குடம் செலுத்துதல், குடும்பிடுதண்டம், அங்கப்பிரதக்ஷணம், தீக்குழியைச் சுற்றிவருதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்தலாம். இவ்வாண்டு பக்தர்களால் "ரத வரிசைக் காணிக்கை" செலுத்தவும் முடியும்.

அனைத்து நடவடிக்கைகளின் போதும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். விழாவில் கலந்துகொள்வோர் அனைவரும் முழுமையாகக் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும். அவர்கள் எந்நேரமும் முகக்கவசங்கள் அணிந்திருக்கவேண்டும் என்றும் இந்து அறக்கட்டளை வாரியம் அறிவுறுத்தியது.

தீமிதித் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் heb.org.sg எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப்பக்கத்தில் கட்டாயம் பதிவு செய்வதுகொள்ளவேண்டும். முன்பதிவு 16 செப்டம்பர் 2022ல் தொடங்கும்.

பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே தீமிதித் திருவிழாவை இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப்பக்கத்திலும் யூடியுப் பக்கத்ததிலும் நேரலையில் காணலாம்.