இர்ஷாத் முஹம்மது
முன்னாள் அமைச்சர் எஸ். தனபாலன் உட்பட 15 பேர் சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர் பட்டியலில் இடம்பெற்று சிறப்பிக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கப்பூர் அரசியலில் தலைசிறந்து பங்காற்றியதற்கான எஸ். ராஜரத்னம் விருது திரு தனபாலனுக்கு வழங்கப்பட்டது.
அண்மையில் மறைந்த நடனக் கலை முன்னோடி சாந்தா பாஸ்கர், தூதர் கே. கேசவபாணி, அமீரலி ஜுமாபாய், கருப்பையா வெள்ளைசாமி, பேராசிரியர் நம்பியார், சூர் சிங், ஜவான்ட் சிங், பி கோவிந்தசாமி செட்டியார், ஜார்ஜ் சுப்பையா, மைமூன் பி, குளோரி பார்னபாஸ், பிசி சுப்பையா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நேற்று சிங்கப்பூர் பொழுதுபோக்கு மன்றத்தில் ஏறத்தாழ 150 பேர் கலந்துகொண்ட நிகழ்வில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதாளர்களுக்குக் கேடயங்களை வழங்கினார்.
அரசியல், கலை, மருத்துவம், தொண்டூழியம், நிதியாதரவு, விளையாட்டு போன்ற வெவ்வேறு துறைகளில் பங்காற்றியவர்கள் இந்தப் பட்டியலுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர் பட்டியல் நிகழ்ச்சி நடைபெற்றது இது இரண்டாம் முறை. இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டில் முதன்முறையாக நடத்தப்பட்டபோது முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் விருதாளர் பட்டியலுக்குத் தலைமை தாங்கினார்.
புகழ்பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றதில் மிகுந்த பெருமை கொள்வதாகத் தெரிவித்தார் திரு தனபாலன்.
சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறை அரசியல் தலைவர்களில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவரான திரு எஸ்.ராஜரத்னத்தின் பெயரில் விருது வழங்கப்பட்டது மேலும் சிறப்பு சேர்த்ததாகத் தெரிவித்தார் அவர்.
திரு ராஜரத்னத்துடன் சேர்ந்து பணியாற்றிய நினைவுகளை விருது பெற்றதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் திரு தனபாலன் பகிர்ந்துகொண்டார்.
"நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை அடிப்படையில் இருந்து உருவாக்கிய மாமனிதர் திரு ராஜரத்னம். பின்னர் வெளியுறவு அமைச்சர் பொறுப்பை நான் ஏற்றேன். எவ்வளவு முக்கிய பங்கை அவர் ஆற்றியுள்ளார் என்பதை அறிந்தேன். இன்று இந்த கௌரவம் எனக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது," என்றார் அவர்.
சரியான தருணத்தில் சரியான இடத்தில் இருந்ததால்தான் அரசியலில் அவரது ஈடுபாடும் பங்கும் சிறப்பாக அமைந்தது என்று தெரிவித்தார் அவர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தெமாசெக் ஹோல்டிங்ஸ், டிபிஎஸ் வங்கி போன்றவற்றுக்குத் தலைவராகவும் சேவையாற்றிய திரு தனபாலன், அதிபர் ஆலோசனை மன்றத்தின் ஆக நீண்டகால உறுப்பினராகச் சேவையாற்றியபின் அண்மையில் பதவி விலகினார்.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர் பட்டியலுக்குத் தகுதியானோரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் வி.பி.நாயர் தலைமையிலான குழுவில் திரு விஸ்வா சதாசிவன், எஸ்.வடிவழகன் முதலியோர் இடம்பெற்றிருந்தனர்.
நிர்வாகக் குழுவிற்குத் தலைமை தாங்கினார் இந்தியன் மூவி நியூஸ் சஞ்சிகையை நீண்டகாலமாக வழிநடத்திய திரு எஸ்.ஏ.நாதன்.