இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளில் தயாராகும்

இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளில் தயாராகும்

3 mins read

கொவிட்-19 சூழலால் தாமதமடைந்த 'பிடிஓ' வீட்டுத் திட்டங்கள்

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழல் கார­ண­மாக தாம­தம் அடைந்த தேவைக்­கேற்ப கட்டி விற்­கப்­படும் (பிடிஓ) வீட்­டுத் திட்­டங்­கள் அனைத்­தும் இரண்டு, மூன்று ஆண்டு­களில் நிறை­வேற்றப்­படும் என வீட­மைப்பு வளர்ச்சிக் கழ­கம் (வீவக) எதிர்­பார்க்­கிறது.

இவ்­வாண்­டின் முற்­பா­தி­யில் 7,200க்கும் மேற்­பட்ட வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்­ட­தாக வீவக நேற்று தெரி­வித்­தது. இந்த எண்­ணிக்கை, இதற்கு முந்­திய இரண்டு ஆண்டு­களில் இதே கால­கட்­டத்­தில் கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­க­ளை­விட அதி­க­மா­கும்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி, மே மாத பிடிஓ திட்­டங்­க­ளின்­கீழ் விற்­ப­னைக்கு விடப்­பட்ட வீடு­க­ளைத் தவிர்த்து, தற்­போது கிட்­டத்­தட்ட 100 வீட்­டுத் திட்­டங்­கள் கட்­டப்­பட்டு வரு­வ­தாக வீவக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது. இந்­தத் திட்­டங்­களுக்­கான காத்­தி­ருப்புக் காலம் இரண்டு முதல் 5.4 ஆண்­டு­கள் வரை­யிலாகும். இடை­நிலை காத்­தி­ருப்புக் காலம் 4.3 ஆண்டு­க­ளா­கும்.

கொவிட்-19 சூழ­லால் ஏற்­பட்ட தாம­தத்தை முற்­றி­லு­மாக மீட்­டெ­டுக்க முடி­யாது என்­பதை வீவக ஏற்­றுக்­கொண்­டா­லும், ஈராண்­டு­களாக ஏற்­பட்ட கடு­மை­யான இடை­யூ­றுக்­குப் பிறகு கட்­டு­மா­னத் துறை மீட்­சி­ய­டை­யத் தொடங்­கி­யுள்­ள­தாக வீவக தலைமை நிர்வாகி டான் மெங் துவெய் கூறி­னார்.

"எங்களுடைய ஆலோ­ச­கர்­கள் மற்­றும் ஒப்­பந்­த­தா­ரர்­க­ளு­டன் சேர்ந்து வீவக அணுக்­க­மா­கப் பணி­யாற்றி வரு­கிறது. கட்டு­மா­னப் பணி­யில் தாமத்­தைக் குறைக்க உரிய நட­வடிக்­கை­க­ளைச் செயல்­ப­டுத்­து­வது­டன் தேவை­யான வளங்­களைப் பெற எங்களுடைய பங்­கா­ளி­களுக்கு நாங்­கள் ஆத­ர­வு அளித்­தும் வரு­கி­றோம். அப்­போது­தான் வீடு வாங்­கி­யோர் தத்­தம் புதிய வீடு­களுக்கு விரைந்து குடி­புக முடி­யும்," என்று திரு டான் விவ­ரித்­தார்.

இவ்­வாண்டு இது­வரை கட்டி முடிக்­கப்­பட்ட 7,200 பிடிஓ வீடு­கள் ஆறு திட்­டங்­களின்­கீழ் வரு­கின்­றன. அவற்­றில் மூன்று திட்­டங்­கள், திட்­ட­மி­டப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்­ன­தா­கவே முடிக்­கப்­பட்டு­விட்­டன.

ஒப்­பு­நோக்க, 2020லும் 2021லும் முறையே 2,485 வீடு­களும் 6,275 வீடு­களும் கட்டி முடிக்­கப்­பட்டன. எல்­லைக் கட்டுப்­பா­டு­கள், பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் கார­ண­மாக கட்­டு­மானப் பணி­கள் பாதிப்­ப­டைந்­தன.

புக்­கிட் பாஞ்­சாங்­கில் உள்ள செஞ்சா ரிட்­ஜஸ், செஞ்சா ஹைட்ஸ், செஞ்சா வேலி, ஓல்ட் ஏர்­போர்ட் சாலை அருகே உள்ள டகோட்டா பிரீஸ், பொங்­கோ­லில் உள்ள நார்த்­ஷோர் எட்ஜ், செங்­காங்­கில் உள்ள ஃபெர்ன்­வேல் கிளேட்ஸ் ஆகி­யன அந்த ஆறு வீட்­டுத் திட்­டங்­கள். இவற்­றில் செஞ்சா ரிட்­ஜஸ், செஞ்சா ஹைட்ஸ், நார்த்­ஷோர் எட்ஜ் ஆகிய திட்­டங்­கள், திட்­ட­மி­ட்­ட­தற்கு முன்­ன­தா­கவே முடிக்­கப்­பட்­டன.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு ஏற்­பட்ட தாம­தத்­தைக் கருத்­தில் கொள்­ளும்­போது, இந்த ஆறு திட்­டங்­க­ளுக்­காக காத்­தி­ருக்­கும் காலம் 3.9 முதல் 5.3 ஆண்­டு­கள் வரை­யி­லாகும். இவற்­றுக்­கான இடை­நிலை காத்­திருப்புக் காலம் 4.1 ஆண்­டு­க­ளா­கும்.

அடுத்த ஈராண்­டு­களில் பிடிஓ திட்­டங்­களுக்­கான இடை­நிலை காத்­தி­ருப்புக் காலம் நான்கு முதல் நாலரை ஆண்­டு­கள் வரை­யி­லாக இருக்­கும் என அதி­கா­ரி­கள் முன்­ன­தா­கத் தெரி­வித்து இருந்­த­னர். ஒப்பு­நோக்க, கொவிட்-19 சூழ­லில் இது நான்கு முதல் ஐந்து ஆண்­டு­க­ளாக இருந்­தது.

இதற்­கி­டையே, பிடிஓ விநி­யோ­கம் 35 விழுக்­காடு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக வீவக தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டு 17,000 வீடு­க­ளாக இருந்த இந்த எண்­ணிக்கை, இவ்­வாண்­டி­லும் அடுத்த ஆண்­டி­லும் 23,000ஆக உயர்த்­தப்­ப­டு­கிறது. பொது வீட­மைப்­புக்­கான தேவை அதி­க­ரித்து வரு­வ­தால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படு­கிறது.

தேவையைப் பொறுத்து, 2021 முதல் 2025 வரை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் மொத்தம் 100,000 வீடுகள் வரை கட்டி முடிக்க முடியும்.

திட்­ட­மிட்­டப்­படி, இவ்­வாண்டு 23,000 வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.