அரசாங்கம் பரிசீலித்து வருகிறது: அமைச்சர் கா.சண்முகம்
ஆண்களுக்கு இடையிலான பாலுறவைக் குற்றமாக்கக்கூடாது என முன்வைக்கப்படும் கருத்துகளுக்கும் திருமணம் குறித்து சிங்கப்பூரின் தற்போதைய நிலைப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கான விருப்பத்துக்கும் இடையே எவ்வாறு சிறந்த வகையில் சமநிலை காண்பது என்பது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 377ஏ தொடர்பில் வெவ்வேறு தரப்பினருடன் அரசாங்கம் விரிவாக கலந்துரையாடியதாகச் சொன்னார்.
இந்தச் சட்டப்பிரிவின்கீழ், பொதுவெளியிலோமறைவாகவோ ஆடவர் ஒருவர் மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவுகொள்வது குற்றமாகும். இக்குற்றத்துக்கு ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
எனினும், இந்தச் சட்டம் உந்துதலாக அமலாக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து 2007ல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் இதுகுறித்த நிலைப்பாட்டை மறுஉறுதிப்படுத்தி உள்ளனர்.
வெவ்வேறு தரப்பினர் உடனான கலந்துரையாடல்களில் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, தாவோயிசம் போன்ற சமயத் தலைவர்கள், அடித்தளத் தலைவர்கள், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட சிங்கப்பூரர்கள், 'எல்ஜிபிடி' குழுக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.
"தங்களுக்கு இடையே பாலியல் உறவுகொள்ளும் ஆடவர்களைச் சிறையில் அடைக்கக்கூடாது என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆண்களுக்கு இடையிலான பாலுறவு குற்றமாக்கப்படக் கூடாது என்றும் அவர்கள் கூறினர்.
"அதேவேளையில், ஆண்களுக்கு இடையிலான பாலுறவு குற்றமாக்கப்படாதது, பெரிய அளவிலான மற்ற மாற்றங்களுக்கு வித்திடக்கூடாது என்பது பெரும்பாலானோரின் கருத்து.
"குறிப்பாக, திருமணம் குறித்த தற்போதைய நிலைப்பாடு தக்கவைத்துக்கொள்ளப்பட வேண்டும் என பெரும்பாலானோர் விரும்புகின்றனர்," என்று அமைச்சர் விவரித்தார்.
திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலானது என்பதைச் சட்ட வரையறுப்பதே தற்போதைய நிலைப்பாடு.
"அது மாறக்கூடாது என்பதையே மக்கள் விரும்புகின்றனர்," என்றார் அமைச்சர் சண்முகம்.
திருமணம் பற்றிய இந்த வரையறையில் இருந்து குறிப்பு எடுத்துக்கொள்ளும் தற்போதைய கொள்கைகளில் மாற்றம் செய்யப்படவும் மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.
"இந்தக் கண்ணோட்டத்தை அரசாங்கம் புரிந்துகொள்கிறது. இவற்றுக்கு இடையே சிறந்த வகையில் எவ்வாறு சமநிலையை எட்டுவது என்பது பற்றி நாங்கள் பரிசீலித்து வருகிறோம்," என்று திரு சண்முகம் கூறினார்.
"எனவே இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் இரு கேள்விகளைக் கையாளுகிறோம். ஒன்று, சட்டப்பிரிவு 377ஏவை என்ன செய்வது என்பது. இரண்டாவது, நீதிமன்றத்தில் சட்ட ரீதியிலான சவால்களில் இருந்து திருமணம் மீதான தற்போதைய நிலைப்பாட்டை எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும் நாங்கள் பரிசீலிக்கிறோம்," என்றார் அமைச்சர் சண்முகம்.
"இந்த விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் அல்ல," என்றும் அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் தீவிர நிலைப்பாடுகளை எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் அமைச்சர் சண்முகம் கேட்டுக்கொண்டார். நாட்டிற்காக வேறுபாடுகளை அமைதியான முறையில் கையாளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.