கொவிட்-19க்கு முன்பு வந்து சென்ற பயணிகளில் 50%ஐ எட்டியது; ஜூனில் 2.9 மில்லியன் பயணிகள்
கொவிட்-19க்கு முன்பு சாங்கி விமான நிலையம் வழியாக வந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கையில் பாதி அளவை இந்த ஆண்டு டிசம்பர்வாக்கில் எட்டிவிட வேண்டும் என்று சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்தது.
ஆனால், அந்த இலக்கை சாங்கி விமான நிலையம் ஜூன் மாதமே நிறைவேற்றிவிட்டது. முதன்முதலாக ஜூன் மாதம் ஏறக்குறைய 2.9 மில்லியன் பயணிகள் சாங்கி விமானநிலையத்தில் இருந்து விமானங்களில் புறப்பட்டனர்; தரையிறங்கினர்; அல்லது இடைவழியாக சிங்கப்பூரில் இறங்கி வேறு விமானத்தில் சென்றனர்.
இந்த எண்ணிக்கை கொரோனாவுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5.8 மில்லியனாக இருந்தது. சாங்கி விமான நிலையக் குழுமம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
சாங்கி விமான நிலையத்தில் ஜூன் மாதம் மொத்தம் 18,400 விமானங்கள் புறப்பட்டுச் சென்றன அல்லது தரையிறங்கின. இந்த எண்ணிக்கை 2019ல் 31,391 ஆக இருந்தது. இதில் 58.6 விழுக்காடு ஜூன் மாதம் சாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சாங்கி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் இரண்டா வது பாதியிலும் தொடர்ந்து அதிகரிக்கும் என கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
புதிய கொவிட்-19 தொற்று அலை தலைகாட்டுவதாக சில நாடுகள் தெரிவித்தாலும்கூட முன்பைவிட அதிக மக்கள் இப்போது பயணம் செய்ய நாட்டத்துடன் இருக்கிறார்கள். சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் உற்சாகமடைகின்றன.
கிழக்கு ஆசிய நாடுகள் மெதுவாக மீட்சி அடைந்த போதிலும் இந்த நிலவரம் சுற்றுலா தொழில்துறைக்கும் ஒட்டுமொத்தமாகப் பொருளியலுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கவனிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, பயணிகள் நிலவரம் பற்றி கருத்துரைத்த 'சோபி ஏவியேஷன்' என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சுயேச்சை பகுப்பாய்வாளரான பிரண்டன் சோபி, ஒவ்வொரு மாதமும் பயணிகளின் எண்ணிக்கை கூடும் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து சுறுசுறுப்பாக இருந்தது. கொவிட்-19க்கு முன்பு வந்து சென்ற மொத்த பயணிகள் போக்குவரத்தில் 43.6% முதல் காலாண்டில் சாதிக்கப்பட்டது.
விடுமுறைக் காலமும் ஏப்ரல் மாதம் முதல் இந்த வட்டாரத்தில் உள்ள பல நாடுகள் தங்கள் எல்லைகளைத் திறந்துவிட்டதும் இதற்கான காரணங்கள்.
சாங்கி விமான நிலையத்தில் இருந்து இப்போது மொத்தம் 85 விமான நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 130 நகர்களுக்குச் சேவையாற்றுகின்றன.
எஸ்ஐஏ நிறுவனம் ஜூன் மாதம் தன்னுடைய நடைமுறைச் செயல்திறன் பற்றி இரண்டு வாரங்களுக்குமுன் அறிவித்தது. அந்த நிறுவனத்தின் விமானங்களில் ஜூன் மாதம் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை, கொரோனாவுக்கு முந்திய எண்ணிக்கையில் 60%ஐ தொட்டுவிட்டது என்று அது தெரிவித்தது.
விமானங்களிலும் முன்பதிவுகள் அதிகரித்து இருக்கின்றன.
எஸ்ஐஏ நிறுவனம் இந்த ஆண்டின் 2வது காலாண்டில் 18,606 விமானச் சேவைகளை நடத்தியது. இது 2019ன் 2வது காலாண்டில் இடம்பெற்ற அதன் 22,948 விமானச் சேவைகளில் ஏறத்தாழ80% ஆகும். ஏர் இந்தியா விமானச் சேவைகள், 2019ல் இருந்த அளவில் 90 விழுக்காட்டு அளவுக்குத் திரும்பிவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

