பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் பணியாற்றும் 25,000க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு அவர்களின் 1.7 முதல் 2.1 மாதம் வரையிலான அடிப்படைச் சம்பளம், சிறப்புத் தொகையாக வழங்கப் படும் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம், சிங்ஹெல்த் ஆகிய பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் பணியாற்றும் தாதியர்களுக்கு அந்தத் தொகை கிடைக்கும். தாதியரை வேலையில் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவும் இந்த பணப்பட்டுவாடாவுக்கு அவர்கள் தகுதி பெறுகிறார்கள்.
இந்தத் தொகை, அரசாங்க நிதியுதவி பெறும் சமூக பராமரிப்பு அமைப்புகளில் பணியாற்றும் மேலும் 2,600 தாதியர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
"ஆகஸ்ட் 1ஆம் தேதி (இன்று) தாதியர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். தாதியர்கள் நம்முடைய முழு சுகாதாரப் பராமரிப்பு ஏற்பாட்டுக்கு ஓய்வின்றித் தொடர்ந்து பாடுபடுகிறார்கள்.
"அதை அங்கீகரித்து அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் தருகிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு இது தக்க தருணம்," என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
'தாதியர் சிறப்புப் பணமளிப்பு' என்று குறிப்பிடப்படும் அந்தச் சிறப்புத் தொகை இந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி தாதியர் பெறுகின்ற அடிப்படை சம்பளத்தைக் கொண்டு கணக்கிடப்படும்.
தங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து வரும் தாதியருக்கு இந்தத் தொகையில் 0.5 மாத ஊதியம், வழக்கமான தாதி சிறப்புப் பணமளிப்பாக வரும் டிசம்பரில் அவர்களுக்குக் கிடைக்கும்.
பிறகு 2023 மார்ச்சிலும் 2023 செப்டம்பரிலும் எஞ்சிய தொகை இரண்டு பகுதிகளாகக் கொடுக்கப்படும்.
இதனிடையே, எதிர்கால தேவையை நிறைவேற்றும் வகையில், உள்ளூர் தாதியர் வளத்தைப் பலப்படுத்த தான் கடப்பாடு கொண்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் அமைச்சு தெரிவித்தது.
தாதிமை தொழிலைக் கவர்ச்சிகரமானதாக ஆக்குவது, உள்ளூர் தாதியருக்குப் பயிற்சி அளிக்கும் ஏற்பாடுகளை அதிகப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் அமைச்சு இதனைச் செய்யும்.
தாதியரைக் கவர்ந்து அவர்களைப் பணியில் தக்கவைத்துக்கொள்வதற்கும் சந்தையில் போட்டித்திறன்மிக்க நிலையில் திகழ்வதற்கும் தொடர்ந்து முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வேலை பார்க்கும் தாதியர்களின் அடிப்படைச் சம்பளம் 5%க்கும் 14%க்கும் இடையில் உயர்த்தப்பட்டது என்றது அமைச்சு.
அந்த உயர்வில் முதல் கட்டம் 2021 ஜூலையிலும் இரண்டாவது கட்டம் 2022 ஜூலையிலும் இடம்பெற்றது.
தாதியர் சிறப்புப் பணமளிப்பு ஏற்பாடு பற்றிய விவரங்கள் பற்றி தங்களுடைய தாதியர்களுக்குப் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள் விளக்கிக் கூறும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
அதேபோல, ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை அமைப்பு, அரசாங்க நிதியுதவி பெறும் சமூகப் பராமரிப்பு நிலையங்களுடன் தொடர்புகொண்டு அந்தச் சிறப்பு நிதி பற்றிய விவரங்களைத் தெரியப்படுத்தும்.

