பதற்றம் நிறைந்த சூழலுக்கிடையே, சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நேன்சி பெலோசி நேற்றிரவு சிங்கப்பூர் நேரம் 10.44க்கு தைவான் மண்ணில் கால் வைத்தார். 25 ஆண்டுகளில் தைவானுக்கு உயர்நிலை அமெரிக்க அரசியல்வாதி ஒருவர் சென்றிருப்பது இதுவே முதல் முறை.
தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ, தைப்பேயில் உள்ள சாங்ஷான் விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்ததாக தைவான் ஊடகச் செய்தி கூறியது.
அவரது வரவை எதிர்பார்த்து ஏராளமான மக்களும் ஊடகத்தினரும் சாலைகளிலும் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பலத்த பாதுகாப்புடன் அவர் தைவான் சென்றுள்ளார்.
அவர் இன்று தைவானிய நாடாளுமன்றத்திற்குச் செல்வார் என்றும் அதிபர் சாய் இங் வென்னைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை திங்கள் அன்று தொடங்கிய திருவாட்டி பெலோசி முதல் கட்டமாக சிங்கப்பூர் வந்திருந்திருந்தார். தொடர்ந்து நேற்று மலேசியா சென்ற அவர், அங்கு தலைவர்களைச் சந்தித்தார்.
பின் கோலாலம்பூரில் இருந்து பிற்பகலில் அமெரிக்க விமானப்படையின் ஜெட் விமானம் தைவன் புறப்பட்டது. பொதுவாக கோலாலம்பூருக்கும் தைபேக்கும் இடையே விமானப் பயணம் ஐந்து மணிநேரம் ஆகும். தென் சீனக் கடலுக்கு மேலே பறப்பதைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் சென்றதால் கூடுதலாக இரண்டு மணி நேரம் ஆனதாகக் கூறப்பட்டது.
ஜூலை 31 அன்று அவரது பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது தைவான் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிங்கப்பூர், மலேசியாவுடன் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் செல்வார் என்றே கூறப்பட்டது.
அமெரிக்காவில் அதிபர், துணை அதிபருக்கு அடுத்து மூன்றாவது உயரதிகாரியாக உயரதிகாரியாகக் கருதப்படுபவர் பெலோசி. அவரது இந்த ஆசிய பயணம் அரசியல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பெலோசியின் தைவான் பயணத்தை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது. அவன் தைவானுக்குச் செல்வது சீனாவின் உள் விவகாரங்களிலும் தலையிடுவதற்கு ஈடாகும் என்று அது எச்சரித்தது.
சீன அதிபர் ஸி ஜின்பிங் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடியபோது, தைவானுடனான பெய்ஜிங்கின் பரிவர்த்தனைகளில் தலையிடுவதற்கு எதிராக அமெரிக்காவை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, "தைவான் செல்ல நான்சி பெலோசிக்கு உரிமை உண்டு," என நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளையில் அவரது முடிவை மதிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்நிலையில், ரஷ்ய -உக்ரேன் போரை நினைவில்நிறுத்தி அதுபோல் சீனாவும் படையெடுக்கலாம் என்ற கணிப்பில் தைவான் தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் தயாராகி வருகிறது. சீனாவுடன் போரை எதிர்கொள்ளும் சூழலில் தைவான் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், சில அதிகாரிகள், வீரர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
சீன ஏவுகணை பாய்ச்சத் தொடங்கினால் மக்கள் பதுங்க, கீழ்தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடங்கள், பாதாள ரயில் போக்குவரத்துத் தடங்கள், நிலத்தடி கடைத்தொகுதிகள் போன்ற நிலத்தடி இடங்களைத் தயார்படுத்தி வருகிறது.
சீனாவில் 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் தனி நாடாகப் பிரிந்து செயல்படத் தொடங்கியது. எனினும் அதன்மீதான உரிமையை சீனா இன்றுவரை விட்டுக்கொடுக்கவில்லை. அத்துடன் என்றாவது ஒருநாள் தைவானை அமைதி வழியிலோ அல்லது போர் மூலமாகவோ வென்று சீனாவுடன் இணைத்தே தீருவோம் என்று கூறி வருகிறது. தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது. சீனாவையும் தைவானையும் பிரிக்கும் கடற்பகுதியில் சீனா ராணுவப் பயிற்சிகளை அடிக்கடி நடத்தி வருகிறது.

