ஐந்தாண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டு பொது மருத்துவமனைகளில் வேலையை விட்டுச் சென்ற தாதியர் எண்ணிக்கை அதிகம் என்று சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தாதியர் நலன், சம்பளம், வேலைப்பளு ஆகியவை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
பொது மருத்துவமனைகளில் 7.4 விழுக்காட்டு தாதியர் சென்ற ஆண்டு வேலையை விட்டனர். இது கடந்த நான்காண்டுகளில் அதிகம். 2017 முதல் 2020 வரை ஒவ்வோர் ஆண்டும் 6%, 6.3%, 7%, 5.4% என இருந்தது.
இதில் வெளிநாட்டுத் தாதியர் விகிதம் இன்னும் அதிகம். கடந்த ஆண்டு 14.8% வெளிநாட்டுத் தாதியர் வேலையை விட்டனர். 2017 முதல் 2020 வரை இந்த விகிதம் முறையே 8.2%, 9.1%, 9.4% 7% ஆக இருந்தது.
"எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நாடு திரும்ப முடிகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளாலும் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதன் பொருள், சிங்கப்பூரில் குறைவான வெளிநாட்டு தாதியர் உள்ளனர். சம்பளமும், பணிச் சூழலும் முக்கியமானவை என்றாலும், இவற்றை மேம்படுத்துவது பற்றி தொடர்ந்து பரிசீலித்தே வருகிறோம். எனவே, இவையே எப்போதும் மனிதவளப் பிரச்சினைகளின் ஆணிவேராக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது," என்றார் திருவாட்டி ரஹாயு.
அதிகமான தாதியர் வேலையை விட்டுப் போனாலும் கடந்த ஐந்தாண்டுகளில் பொது மருத்துவ மனைகளின் தீவிர சிகிச்சை மற்றும் பொது படுக்கைப் பிரிவுகளில் தாதியரின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் இல்லை என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.
அதிகமான வெளிநாட்டுத் தாதியர் பதவி விலகுவதை அடுத்து உள்ளூர் தாதியருக்கு போதுமான ஓய்வு வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று கூறிய நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங், தாதியர் சம்பளம் குறித்துக் கேட்டார்.
அவருக்குப் பதிலளித்த திருவாட்டி ரஹாயு, பொது - தனியார் மருத்துவமனைகள் மனிதவளத்திற்குப் போட்டியிடுவதால் சம்பளத் தகவல்களை வெளிப்படையாக வழங்கத் தயங்குவதாகவும், மேலும் தனியார் துறையில் தாதியர் சம்பளம் குறித்த தரவுகள் தம்மிடம் இல்லை என்றும் கூறினார். எனினும், தாதியர், தாதியர் பணிக்குழுவின் ஆகப் பெரிய விகிதத்தில் இருக்கும் மூத்த தாதியர் ஆகியோரின் சம்பளத்தை அவர் வெளியிட்டார்.
"தாதியரின் சேவையைத் தக்கவைத்துக்கொள்வதே முக்கிய பிரச்சினை," என்ற அவர், தாதிமை ஊழியரணியை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் பல பகுதிகள் உள்ளன என்றார்.
முதலாவது, நிர்வாகச் சுமையைக் குறைத்து நோயாளி பராமரிப்பில் கவனம் செலுத்தும் வகையில் தாதியரின் வேலைப் பொறுப்புகளை மதிப்பாய்வு செய்வது.
இரண்டாவது, உள்ளூர் மற்றும் அனைத்துலக அளவில் போட்டித்தன்மையுடன் ஊதியம் இருப்பதை உறுதி செய்வது.
மூன்றாவது, மூப்படையும் மக்கள் தொகை காரணமாக சுகாதாரப் பராமரிப்புத் துறையில் அதிகரித்து வரும் தேவைகளைச் சமாளிக்க, குடும்பங்களும் பராமரிப்பாளர்களும் தங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிப்பதில் பங்காற்ற வேண்டும் என்று திருவாட்டி ரஹாயு கேட்டுக்கொண்டார்.
போதுமான தாதியர் இருப்பதை உறுதி செய்ய சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது என்ற அவர், 2019ல் கிட்டத்தட்ட 42,800 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட தாதியர் எண்ணிக்கை, 2021 இறுதியில் 43,000 ஆக சற்று அதிகரித்துள்ளது என்றார்.
2014ல் ஏறக்குறைய 1,500 ஆக இருந்த உள்ளூர் தாதியர் சேர்ப்பு 2021ல் 2,100 ஆக அதிகரித்துள்ளது. இது சுகாதாரக் கட்டமைப்பில் தாதியர் எண்ணிக்கை நிலையாக இருப்பதை உறுதி செய்கிறது என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.
மேலும் நாடாளுமன்றச் செய்திகள் பக்கம் 2ல்