பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையையும் போதைப்பொருள் கட்டுப்பாடு, எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான போர், சட்டவிரோதக் குடியேறிகளை நாடுகடத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சீன வெளியுறவு அமைச்சு அறிவித்து இருக்கிறது.
தனது எச்சரிக்கையையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்றப் பேராளர் குழு தைவான் சென்றதால் சீனா ஆத்திரமுற்றது. அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அது எச்சரித்தது.
அதன்படி, தைவான்மீது பல்வேறு தடைகளை விதித்த சீனா, தைவானை ஒட்டி இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் போர்ப் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சீனா நேற்று அறிவித்தது.
அத்துடன், இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சுகளுக்கு இடையிலான பணிநிலைச் சந்திப்புகளும் நிறுத்தி வைக்கப்படும்.
தைவானைத் தனிமைப்படுத்த விடமாட்டோம்: பெலோசி
இதனிடையே, தைவானைச் சீனா தனிமைப்படுத்துவதை அமெரிக்கா அனுமதிக்காது என்று திருவாட்டி பெலோசி தெரிவித்தார்.
தமது ஆசியப் பயணத்தின் கடைசிப் பகுதியாக நேற்று ஜப்பான் சென்ற திருவாட்டி பெலோசி, சீனாவின் போர்ப் பயிற்சியை நேரடியாகச் சாடவில்லை. எனினும், அமெரிக்க அரசியல்வாதிகள் தைவானுக்குத் தடை இன்றிப் பயணம் செய்ய முடியும் என்று அவர் வாதிட்டார்.
"மற்ற இடங்களுக்குச் செல்ல முடியாதபடி தைவானைக் கட்டுப்படுத்த சீனா முயலலாம். ஆனால், நாங்கள் அங்கு செல்வதைத் தடுத்து, தைவானைத் தனிமைப்படுத்த சீனாவால் முடியாது," என்றார் திருவாட்டி பெலோசி.
தைவான் நீரிணையில் அமைதியையும் இப்போதைய நிலைமையைக் கட்டிக்காப்பதே தங்களது பயணத்தின் நோக்கம் என்றும் இந்த வட்டார நிலவரத்தை மாற்றுவதற்காகத் தாங்கள் வரவில்லை என்றும் அவர் சொன்னார்.
தங்களது ஆசியப் பயணத்தின் முதற்கட்டமாக சிங்கப்பூர் வந்த அமெரிக்கப் பேராளர் குழு, அதன்பின் மலேசியா, தைவான், தென்கொரியா சென்று, இறுதியாக ஜப்பானுடன் அப்பயணத்தை நிறைவுசெய்கிறது.
தொடரும் போர்ப் பயிற்சி
இவ்வேளையில், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளபோதும் நேற்று இரண்டாம் நாளாகச் சீனா தனது போர்ப் பயிற்சியைத் தொடர்ந்தது.
"காலை 11 மணியளவில், தைவான் நீரிணைப் பகுதியில் சீனப் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் பயிற்சியில் ஈடுபட்டன. அவை தைவான் நீரிணையின் நடுக்கோட்டைக் கடந்து சென்றன," என்று தைவானியத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இதனிடையே, திருவாட்டி பெலோசி தைவானுக்குச் சென்றதற்கு சீனா ஆற்றும் எதிர்வினை 'வெளிப்படையாக ஆத்திரமூட்டுவதாக' உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சாடியிருக்கிறார்.
கம்போடியாவில் நடந்த கிழக்கிந்திய உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரு பிளிங்கன், மாபெரும் போர்ப் பயிற்சியின்மூலம் தைவானை மட்டுமன்று, அண்டை நாடுகளையும் சீனா அச்சுறுத்தப் பார்க்கிறது என்றார். ஏவுகணைச் சோதனை, போர்ப் பயிற்சிகள் மூலம் தைவான் நீரிணையில் இப்போதைய நிலையைச் சீனா மாற்ற முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் பங்கேற்ற கூட்டத்தில் திரு பிளிங்கன் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.