பங்ளாதேஷில் அரசாங்கம் எரிபொருள் விலையை 52 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பெட்ரோல் நிலையங்களுக்குப் படையெடுத்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவாக இம்முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை 51.7 விழுக்காடும் டீசல் விலை 42.5 விழுக்காடும் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக பங்ளாதேஷ் அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது.
விலையுயர்வு நடப்புக்கு வருவதற்குள் எரிபொருள் நிரப்பிவிட, நாடு முழுவதும் மோட்டார்சைக்கிளோட்டிகள் பெட்ரோல் நிலையங்களுக்குப் படையெடுத்தனர். சில நிலையங்கள் எரிபொருள் விற்பனையை நிறுத்தியதால், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூண்டன.
எரிபொருள் விலையுயர்வு நாட்டில் மில்லியன் கணக்கானோரின் வாழ்வாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
விலையுயர்வு அறிவிக்கப்பட்டவுடன் சில்ஹெட் நகரில் சில பெட்ரோல் நிலையங்கள் உடனடியாக விலையை உயர்த்த முற்பட்டதாக காவல்துறை ஆணையர் முகம்மது நிஷாருல் ஆரிஃப் கூறினார். இதை எதிர்த்து மக்கள் திரண்டு ஆர்ப்பரித்ததாக அவர் சொன்னார்.
உலகச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக எரிபொருள் விலையை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் நஸ்ரு ஹமீது செய்தியாளர்களிடம் கூறினார்.
"அனைத்துலக நிலவரத்தைக் கருத்தில்கொண்டு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. நிலவரம் சீரானவுடன் அதற்கு ஏற்றாற்போல எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படும்," என்றார் அவர்.
உக்ரேனில் நிலவிவரும் போர் காரணமாக பங்ளாதேஷில் எரிசக்தி விலைகள் ஏற்றம் கண்டுள்ளன.
1,500 மெகாவாட் எரிசக்தி உற்பத்தி ஆற்றலுக்குப் பங்கு வகிக்கும் டீசல் ஆலைகள் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டுள்ளன. இது, மொத்த எரிசக்தி உற்பத்தியில் 10 விழுக்காடாகும். இதனால், அண்மை வாரங்களில் பங்ளாதேஷின் பல பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதுபோக, வலுவிழந்துவரும் நாணயமும் குறைந்துவரும் அந்நிய செலாவணி இருப்பும் பங்ளாதேஷ் அரசாங்கத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில், அமெரிக்க டாலருக்கு நிகரான பங்ளாதேஷ் நாணயத்தின் மதிப்பு 20 விழுக்காடு சரிந்துள்ளது.
இந்நிலையில், அனைத்துலகப் பண நிதியத்திடம் பங்ளாதேஷ் US$4.5 பில்லியன் (S$6.2 பி.) நிதியுதவி கேட்டுள்ளதாக டெய்லி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
தற்போதைய பொருளியல் நெருக்கடியை எதிர்கொள்ளவும் நீண்டகால சவால்களுக்கு நிதி அளிக்கவும் பங்ளாதேஷுக்கு உதவ தான் தயாராக இருப்பதாக முன்னதாக பண நிதியம் குறிப்பிட்டிருந்தது.
உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் இருந்தும் பங்ளாதேஷ் தலா US$1 பில்லியன் கடனுதவி கேட்டுள்ளது.

