மோனலிசா
யுகேஷ் கண்ணன்
நாட்டின் பாதுகாப்பில் நாட்டமும் பொதுச் சேவையில் ஈடுபாடும் கொண்டுள்ள ராணுவப் பயிற்சி அதிகாரி கோவிந்தன் சோலை வள்ளி, 19, இவ்வாண்டு சிங்கப்பூரின் உயரிய விருதுகளில் ஒன்றான அதிபர் கல்விமான் விருதைப் பெற்றுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் இவ்விருதைப் பெற்றுள்ளது இதுவே முதன்முறை. சிங்கப்பூர் ஆயுதப் படையின் உபகாரச் சம்பளத்தையும் அண்மையில் பெற்றார் சோலை வள்ளி.
இரட்டை உபகாரச் சம்பளத்தைப் பெற்றிருக்கும் இவர், நெதர்லாந்திலுள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டக்கல்வியில் அனைத்துலக உறவுகள், அமைப்புகள் தொடர்பான கல்வியை மூன்றாண்டுகளுக்குப் பயில்வார்.
இஸ்தானாவில் நேற்று மாலை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இவருடன் திரு யூஜின் சுவா வெய்ஹேங், திரு லாவ் கா கியோங் ஆண்ட்ரூ, குமாரி இங் சி ஜியே எலிசபெத் ஆகியோரும் அதிபர் கல்விமான் விருதைப் பெற்று உள்ளனர்.
இந்த உபகாரச் சம்பளம் தமக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாகவும் வருங்காலத்தில் சிறந்த போர் வீரராகவும் தலைவராகவும் உருவெடுப்பதற்கான வாய்ப்பாக இதை தாம் கருதுவதாகவும் கூறிய சோலை வள்ளி, நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக சிங்கப்பூர் ஆயுதப் படையில் இணைந்துள்ளதாகவும் கூறினார்.
தொடக்கக் கல்லூரி காலத்தில் தற்காப்பு அமைச்சு நடத்திய மெய்நிகர் அனுபவ நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் சமூகத்திற்கு தம்மால் இயன்றதை திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதாக இவர் கூறுகிறார்.
நாட்டைப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் ஆயுதப் படை முக்கிய பங்காற்றுவதை உணர்ந்து நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற நோக்குடன் அதில் இணைந்து தற்சமயம் ராணுவப் பயிற்சி அதிகாரியாக இருக்கும் இவர், தமது மேற்படிப்பை முடித்த பிறகு, பல ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரிய விரும்புகிறார்.
கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஒன்பது வார அடிப்படை ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டபோது பல ஆயுதப் படை உயர் அதிகாரிகளைச் சந்தித்ததும் அவர்கள் பகிர்ந்துகொண்ட பணி அனுபவங்களும் தமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சோலை வள்ளி கூறினார்.
பயிற்சி காலத்தில் சக வீரர்களுடன் மேற்கொண்ட கடினமான பயிற்சிகளும் குழுவில் ஒருவரை ஒருவர் ஊக்குவித்ததும் இலக்கை நோக்கி திட்டமிடப்பட்ட செயல்பாடுகளும் தம்மை இந்தப்பணிக்கு உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தியது என்றும் இவர் சொன்னார்.
ஆங்கிலோ சீன தொடக்கக் கல்லூரி முன்னாள் மாணவியான சோலை வள்ளி, "என்னுடைய அம்மா சிண்டா தொண்டுழிய நிலையத்தில் தொண்டூழியம் செய்வதைக் கண்டு உயர்நிலைப்பள்ளி காலத்திலேயே நானும் தொடக்கநிலை மாணவர்களுக்கு 'கோடிங்' எனும் நிரலிடுதலைக் கற்றுக்கொடுக்கும் குழுவில் இணைந்து தொண்டூழியம் புரிய ஆரம்பித்தேன். அதன் மூலம் மாணவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குக் கற்பித்தது மிகுந்த மனநிறைவை அளித்தது," என்று பகிர்ந்தார்.
தொடக்கக் கல்லூரியில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் சிறந்த கலைப் பிரிவு மாணவியாக திகழ்ந்த சோலை வள்ளி, இரண்டாம் ஆண்டில் பள்ளி முதல்வரின் சிறந்த மாணவர் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இவர் சிங்கப்பூர் ஆயுதப் படையின் இளம் தலைவர் விருது, சிறந்த கல்வித் தேர்ச்சிக்கான 'எடுசேவ்' விருது, நல்ல தலைமைத்துவ விருது போன்ற பல விருதுகளைக் குவித்துள்ளார். மென்பந்து விளையாட்டாளரான இவர் தமது தொடக்கக் கல்லூரி அணியின் தலைவியாக இருந்து பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
பொதுச் சேவையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், இந்திய சமூகத்தில் மூத்தோருக்கும் இளம் தலைமுறையினருக்கும் பல வழிகளில் தொண்டூழியம் செய்தும் வருகிறார். மேலும் இவர் தடுப்பூசித் தூதராகவும் இளம் போதைப் புழங்கித் தடுப்பாளராகவும் இருந்து உள்ளார்.

