உலகப் பொருளியல் கண்ணோட்டம் மோசமடைதல், பணவீக்கத்தின் எதிரொலி
உலகப் பொருளியல் கண்ணோட்டம் மோசமடைந்து வருவதையும் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதையும் முன்னிட்டு, சிங்கப்பூர் அரசாங்கம் இவ்வாண்டிற்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு விகித இடைவெளியை குறைத்துள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சு, இவ்வாண்டிற்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னுரைப்பு விகித இடைவெளியை 3லிருந்து 4 விழுக்காடு வரை குறைத்து உள்ளது. முன்னதாக, இந்த முன்னுரைப்பு 3லிருந்து 5 விழுக்காடு வரை இருந்தது.
இவ்வாண்டு முற்பகுதியில் சிங்கப்பூர் பொருளியலின் செயல்பாட்டையும் உலகளாவிய, உள்நாட்டுப் பொருளியல் நிலவரத்தையும் கருத்தில்கொண்டு பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு விகித இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு நேற்று தெரிவித்தது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 4.4 விழுக்காடாக இருந்தது. இதன் பொருட்டு, இவ்வாண்டு முற்பகுதியில் பொருளியல் வளர்ச்சி 4.1 விழுக்காடாகப் பதிவானது. இவ்வாண்டிற்கான தனது இரண்டாம் காலாண்டு சிங்கப்பூர் பொருளியல் ஆய்வில் அமைச்சு இதனைத் தெரிவித்தது.
இரண்டாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி 4.8 விழுக்காடாக இருக்கும் என கடந்த ஜூலையில் அமைச்சு முன்னுரைத்து இருந்தது. ஆனால், வளர்ச்சி விகிதம் இதைவிட குறைவாகப் பதிவானது. என்றாலும், முதலாம் காலாண்டில் எட்டப்பட்ட 3.8 விழுக்காடு பொருளியல் வளர்ச்சியைவிட இது அதிகம்.
காலாண்டு அடிப்படையில் பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டதன் நிலையில், பொருளியல் 0.2 விழுக்காடு சுருங்கியது. ஒப்புநோக்க, முதலாம் காலாண்டில் அது 0.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
பொருளியல் வளர்ச்சி குறித்து கடைசியாக முன்னுரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளவில் பொருளியல் நிலவரம் மேலும் மோசமடைந்து இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் திரு கேப்ரியல் லிம் கூறினார்.
"எதிர்பார்க்கப்பட்டதைவிட வலுவான பணவீக்க நெருக்குதலும் அதற்குப் பதில் நடவடிக்கையாக நாணயக் கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளதும் பெரிய பொருளியல் நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏறபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் உற்பத்தித்துறை ஆண்டு அடிப்படையில் 5.7 விழுக்காடு விரிவடைந்தது. முதலாம் காலாண்டில் இத்துறையில் வளர்ச்சி 5.5 விழுக்காடாக இருந்தது.
கட்டுமானத் துறையில் வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 3.3 விழுக்காடாகப் பதிவானது. ஒப்புநோக்க, முதலாம் காலாண்டில் அது 2.4 விழுக்காடாக இருந்தது.
மொத்த விற்பனை வர்த்தகத் துறை ஆண்டு அடிப்படையில் 1.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது. முதலாம் காலாண்டில் இத்துறையில் வளர்ச்சி 4.8 விழுக்காடாக இருந்தது.
ரஷ்யா-உக்ரேன் போர் மேலும் தீவிரமடைந்தால் பணவீக்க நெருக்குதல் மேலும் மோசமடையக்கூடும் என்று கூறிய திரு லிம், இதனால் உலகளவில் பொருளியல் வளர்ச்சி மேலும் மெதுவடையக்கூடும் என்றார்.

