சிங்கப்பூரில் சளி, காய்ச்சல், இருமல் மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கூடுதலான கொவிட்-19 நோயாளிகள் மருத்துவரிடம் செல்லாமல் சொந்தமாக மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ள நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அண்மை காலமாக அதிகமாகக் காணப்படும் ஓமிக்ரான் வகைக் கிருமி, டெல்டா வகையைவிட அதிகம் பரவக்கூடியது என்றாலும் அதன் கடுமை குறைவாகவே உள்ளது.
ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றியவர்களுக்கு பெரும்பாலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் வாட்சன்ஸ், கார்டியன் போன்ற கடைகளில் உள்ளவை உட்பட பல மருந்தகங்களில் சளி இருமலுக்கான 'பெனடால் காஃப் அண்ட் கோல்ட்', 'டிகொல்ஜன்' போன்ற மருந்துகள் குறைவாக உள்ளன.
மின்வர்த்தகத் தளங்களில் உள்ள சில வர்த்தகர்களிடம் இந்த இரண்டு மருந்துகளும் இருப்பில் உள்ளன. ஆனாலும் அவை குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளன.
கார்டியன், வாட்சன்ஸ் ஆகிய கடைகள், ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய இருப்பு வந்து சேரும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறின.
பெனடால் மருந்தைத் தயாரிக்கும் ஹேலியோன் நிறுவனம், தான் இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் அந்த மருந்தைத் தயாரித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
இருப்பினும் சளி, காய்ச்சல் மருந்துகளுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்றும் முன்னுரைத்துக் கூறமுடியாத அளவுக்கு உள்ளது என்றும் ஹேலியோன் கூறியது.

