அமெரிக்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு நாள் பயணமாக தைவான் சென்றுள்ளனர்.
இந்த மாதம் மட்டும் இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவான் சென்றுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோசி இம்மாதத் தொடக்கத்தில் தைவான் சென்றார்.
அதனால் சினமடைந்த சீனா, தைவான் அருகே போர் ஒத்திகையை நடத்தி அதன் பகுதியாக ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
இம்முறை அமெரிக்க செனட்டர் எட் மார்க்கியும் மேலும் நான்கு மன்ற உறுப்பினர்களும் இன்று தைவான் சென்றுள்ளனர்.
அவர்கள் வருகை பற்றி முன்னதாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இந்தோ பசிஃபிக் வட்டாரத்துக்கு மேற்கொள்ளும் பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் தைவான் சென்றுள்ளதாக தைப்பேயில் உள்ள அமெரிக்க அலுவலகம் கூறியது.
தைப்பே விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று அவர்களில் சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தைவானிய ஊடகங்கள் வெளியிட்டன.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை அன்று தைவானிய அதிபர் சாய் இங்-வென்னைச் சந்திப்பார்கள் என்று அமெரிக்க அலுவலகம் தெரிவித்தது.
மேலும், தைவானிய உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்து அமெரிக்க தைவான் உறவு பற்றி அமெரிக்கக் குழு பேச்சு நடத்தும் என்றும் கூறப்பட்டது.
தைவானை தனது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட மாநிலம் என்று கருதும் சீனா, தேவைப்பட்டால் அதை ராணுவ பலம் மூலம் இணைக்கத் தயாராய் உள்ளதாக அண்மையில் தெரிவித்தது.
அது குறித்த வெள்ளை அறிக்கையையும் சீனா வெளியிட்டது.

