ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்
பராவில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கியால் ஏறத்தாழ ஐந்து முறை சுட்ட ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் விமான நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அலசி ஆராய்ந்தனர். ஒருவர் மட்டுமே துப்பாக்கியால் சுட்டதாக இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை மூலம் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேன்பரா விமான நிலையத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது," என்று ஆஸ்திரேலியக் காவல்துறை அறிக்கை வெளியிட்டது.
அந்த ஆடவர் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர் ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று பிற்பகல் விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்திற்குள் நுழைந்ததாகவும் அங்குள்ள பெரிய கண்ணாடிச் சன்னல்களுக்கு அருகில் அமர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு அமர்ந்திருந்ததாகவும் அதையடுத்து திடீரென்று துப்பாக்கியை வெளியே எடுத்து ஏறத்தாழ ஐந்து முறை சுட்டதாகவும் கேன்பரா காவல்துறையின் இடைக்கால கண்காணிப்பாளர் டேவ் கிராஃப்ட், செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சம்பவம் காரணமாக கேன்பரா விமான நிலையம் மூடப்பட்டது. விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. விசாரணைக்குப் பிறகு, விமான நிலையம் அதே நாளில் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கநிலைக்குத் திரும்பியது.
இருப்பினும், சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
புறப்பாடு முனையத்தில் இருந்த கண்ணாடிச் சன்னல்களை அந்த ஆடவர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் ஆகியோரை அவர் குறிவைக்கவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
நடுத்தர வயது ஆடவர் ஒருவர் யாரையும் குறிவைக்காமல் துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறியதாக தி கார்டியன் நாளிதழ் தெரிவித்தது.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கிருந்தோர் பயத்தில் அலறியதாக சம்பவம் நிகழ்ந்தபோது விமான நிலையத்தில் இருந்த ஆஸ்திரேலிய செய்தியாளர் லில்லி தாமஸ் தெரிவித்தார்.
அனைவரும் பயந்து ஓடியதாகவும் குழந்தையுடன் இருந்த மூதாட்டி ஒருவருடன் தாம் மேசைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

