குறுஞ்செய்திகள் வழியாக பொதுமக்களுடன் உரையாடும் அனைத்து அமைப்புகளும் குறுஞ்செய்திகளை அனுப்பும் தங்கள் 'ஐடி' விவரங்களை மத்திய பதிவகம் ஒன்றில் பதிந்துகொள்ள வேண்டும்.
மோசடிகளை எதிர்கொள்ள முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரை ஒன்று நடப்புக்கு வந்தால் இந்தப் பதிவு முறை கட்டாயமாகும்.
இவ்வாண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கிய குறுஞ்செய்தி அனுப்பும் 'ஐடி' பதிவகம், மோசடி குறுஞ்செய்திகளைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து அவற்றைத் தடை செய்ய முடிவதாகக் கூறப்படுகிறது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் துணை நிறுவனமான சிங்கப்பூர் கட்டமைப்புத் தகவல் நிலையம் இந்தப் பதிவகத்தை இயக்குகிறது.
இந்தப் பதிவகம் தொடங்கியதில் இருந்து 120க்கும் மேற்பட்ட பொது, தனியார் துறை நிறுவனங்கள் இதற்குப் பதிவு செய்து உள்ளன.
இப்பதிவகம் தொடங்கியது முதல், மோசடி குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை மும்மடங்கு குறைந்துள்ளதாக ஆணையம் நேற்று தெரிவித்தது.
"மோசடித் தடுப்பு ஆற்றல்களை வலுவாக்க, குறுஞ்செய்திகளை அனுப்பும் 'ஐடி' விவரங்களைப் பயன்படுத்தும் அமைப்புகள் இந்தப் பதிவகத்தில் பதிந்துகொள்வதைக் கட்டாயமாக்க நாங்கள் எண்ணுகிறோம்," என்று ஆணையம் கூறியது.
அதாவது, பதிவகத்தில் பதிந்துகொண்ட 'ஐடி' விவரங்களைக் கொண்டிருக்கும் அமைப்புகள் மட்டுமே குறுஞ்செய்திகளை அனுப்ப அனுமதிக்கப்படும்.
மற்ற 'ஐடி' விவரங்களைக் கொண்டிருக்கும் குறுஞ்செய்திகளுக்கு தொடக்கத்திலேயே தடை விதிக்கப்படும்.
"குறுஞ்செய்தி ஒரு பாதுகாப்பான தொடர்புத் தளமாக விளங்க இந்த ஏற்பாடு வகை செய்கிறது," என்றது ஆணையம்.
இந்தப் பதிவகத்தில் பதிந்துகொள்ள வரும் அக்டோபர் முதல் ஆண்டிறுதி வரை அமைப்புகளுக்கு கால அவகாசம் வழங்க ஆணையம் பரிந்துரைத்தது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மோசடியாக இருக்கவல்ல குறுஞ்செய்திகளை அடையாளம் கண்டு அவற்றைத் தொடக்கத்திலேயே தடுக்க இயந்திர வாசிப்புத் தொழில்நுட்பத்தைப் பொருத்துவதைக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆணையம் பரிந்துரைத்தது.
குறுஞ்செய்திகளுக்குள் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பது இத்தகைய தீர்வுகளில் அடங்கும்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள், ஆலோசனை ஒன்றில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆலோசனை செப்டம்பர் 9ஆம் தேதி முடிவுறும்.
இந்தப் பதிவகத்தில் பதிந்துகொண்டுள்ள அமைப்புகளில் மத்திய சேமநிதிக் கழகமும் ஒன்று. 'சிபிஎஃப் போர்ட்' எனும் 'ஐடி'யில் இருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் உண்மையானவை என்று கடந்த மாதம் கழகம் தெரிவித்து இருந்தது.
மத்திய சேமநிதி, வேலைநலன் மற்றும் மூத்தோர் ஆதரவுத் திட்டம் குறித்த விவகாரங்களுக்கு 'சிபிஎஃப் போர்ட்' எனும் 'ஐடி'யைப் பயன்படுத்தி மட்டுமே கழகம் பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகிறது. 'SG-Workfare', 'SG-SSS' ஆகிய 'ஐடி'களைப் பயன்படுத்தவதை அது நிறுத்திவிட்டது.
இங்குள்ள சில வங்கிகளும் இந்தப் பதிவகத்தில் பதிந்துகொண்டு உள்ளன.
அரசாங்க அமைப்புகள் அனைத்தும் இந்தப் பதிவகத்தில் கட்டங்கட்டமாக சேரும் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரான திரு டியோ சீ ஹியன் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.
இதர தளங்கள் ஆக்கபூர்வம் குறைந்தவையாக மதிப்பிடப்படும்போது மட்டுமே இணைப்புகள் பயன்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
இணைப்புகளுடன் குறுஞ்செய்திகளை அனுப்பும்போது .gov.sg என்பதுடன் முடிவுறும் இணைப்புகளை மட்டுமே அரசாங்க அமைப்புகள் அனுப்பும்.

