பணவீக்கம் ஆண்டிறுதியில் உச்சம் தொடும்

பணவீக்கம் ஆண்டிறுதியில் உச்சம் தொடும்

3 mins read

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கருத்து

சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் அடுத்த இரண்டு முதல் நான்கு மாதங்­களில் உச்­சத்தை எட்டி, அதன்­பின் தணி­யத் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

புவி­சார் அர­சி­யல் சூழல், விநி­யோ­கத் தொடர் பிரச்­சி­னை­கள், நிலைத்­தன்­மை­மிக்க பொரு­ளி­ய­லாக மாறு­வ­தற்கு நாடு­கள் எடுக்கும் முயற்­சி­கள் ஆகி­ய­வற்­றைப் பார்க்­கும்­போது, பண­வீக்க விகி­தம் அதி­க­மா­கவே இருக்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

அதே நேரத்­தில், கடந்த பத்து ஆண்­டு­களில் இருந்­த­தைப்போல், அதா­வது பூஜ்­ஜி­யம் முதல் ஒரு விழுக்­காடு என்ற நிலைக்­குப் பண­வீக்­கம் திரும்­பாது என்று நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு வோங் குறிப்­பிட்­டார்.

"பசு­மைப் பொரு­ளி­ய­லுக்கு மாற­வும் மீள்­தி­றன்­மிக்க விநி­யோ­கத் தொட­ரைக் கொண்­டி­ருக்­க­வும் நாம் சற்று அதிக விலை கொடுத்தே ஆக­வேண்­டும்," என்­றார் அவர்.

புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­தின் முதன்மை ஆசி­ரி­யர் ஜான் மிக்­கல்த்­வெய்ட்­டுக்கு நேற்று முன் தினம் அளித்த நேர்­கா­ண­லின்­போது துணைப் பிர­த­மர் வோங் இவ்­வாறு தெரி­வித்­தார்.

பண­வீக்­கத்­தைக் குறைக்­கும் முயற்­சி­யாக, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கடந்த ஒன்­பது மாதங்­களில் நான்கு முறை நாண­யக் கொள்­கை­யைக் கடு­மை­யாக்­கி­யுள்­ள­தைச் சுட்­டிய அவர், அர­சாங்­கம் நிலை­மையை மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது என்­றும் சொன்­னார்.

அத்­து­டன், விலை­வாசி உயர்­வால் எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளோ­ருக்­காக உத­வித் திட்­டங்­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் துணைப் பிர­த­மர் கூறி­னார். உட­னடி இடர்­த­ணிப்பு உத­வி­யாக கடந்த ஜூன் மாதம் $1.5 பில்­லி­யன் ஆத­ர­வுத் தொகுப்பு அறி­விக்­கப்­பட்­டதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்ட சில திட்­டங்­கள் வரும் மாதங்­களில் நடப்­பிற்கு வர­வி­ருப்­ப­தாக அவர் சொன்­னார்.

"பண­வீக்­கம் மேலும் மோச­மா­னால் கூடு­தல் உதவி வழங்­கு­வோம் என்று ஏற்­கெ­னவே உறுதி­ அளித்­துள்­ளோம்," என்­றார் துணைப் பிர­த­மர்.

இத­னி­டையே, அடுத்த ஆண்­டி­லும் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­கான அபா­யங்­கள் அதி­க­ரித்து வரு­வது குறித்து அர­சாங்­கம் கவ­னத்­தில் கொண்­டுள்­ள­தாக திரு வோங் கூறி­னார்.

இவ்­வாண்டு சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 3% முதல் 5% வரை உய­ர­லாம் என்று முன்­ன­தா­கக் கணிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், வர்த்­தக, தொழில் அமைச்சு கடந்த வாரம் அதனை 3% முதல் 4% எனக் குறைத்­து­விட்­டது.

இந்­நி­லை­யில், வரு­வாய்ப் பற்­றாக்­கு­றையை எதிர்­கொண்­டுள்­ள­தால் முன்­னர் அறி­வித்­த­படி பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) அடுத்த இரு ஆண்­டு­களில் தலா ஒரு விழுக்­காடு உயர்த்த அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டுள்­ள­தா­கத் துணைப் பிர­த­மர் தெரி­வித்­துள்­ளார்.

இப்­போது ஏழு விழுக்­கா­டாக இருக்­கும் ஜிஎஸ்டி, வரும் 2023ஆம் ஆண்­டில் எட்டு விழுக்­கா­டா­க­வும் அதற்­க­டுத்த 2024ஆம் ஆண்­டில் ஒன்­பது விழுக்­கா­டா­க­வும் உயர்த்­தப்­ப­ட­வி­ருக்­கிறது.

மூப்­ப­டை­யும் மக்­கள்­தொ­கை­யா­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செல­வு­கள் அதி­க­ரித்து வரு­வ­தா­லும் சரி­யா­ன­வற்­றைச் செய்ய வேண்­டி­யுள்­ளது என்­றும் அதி­கம் செல­விட வேண்­டி­யுள்­ளது என்­றும் திரு வோங் சொன்­னார்.

அதே நேரத்­தில், அர­சாங்­கத்­தின் உத­வி­க­ளால் ஜிஎஸ்டி உயர்வு குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளைப் பாதிக்­காது என்­றும் அவர் வலி­யு­றுத்­திக் குறிப்­பிட்­டார்.

வரு­மா­னத்தை உயர்த்­து­வ­தற்­கா­கப் புதிய சொத்து வரி­களை அறி­மு­கப்­ப­டுத்த அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளதா என்று கேட்­ட­தற்கு, சிங்­கப்­பூர் எப்­போ­தும் தனது வரி­வி­திப்பு முறையை மேம்­ப­டுத்த முயன்று வரு­கிறது என்­றும் அதே வேளை­யில் அது நியா­ய­மாக இருப்­ப­தும் படிப்­ப­டி­யாக இடம்­பெறு­வ­தும் உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்­றும் திரு வோங் பதி­லு­ரைத்­தார்.