இந்தோனீசியாவின் பாலி தீவில் இந்த ஆண்டு பிற்பகுதியில் நடக்கவிருக்கும் ஜி20 நாடுகள் உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் திட்டமிட்டு வருகிறார்கள் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்து இருக்கிறார்.
"சீன அதிபர் வருவார். தானும் வருவதாக அதிபர் புட்டினும் என்னிடம் கூறி இருக்கிறார்," என்று கடந்த வியாழக்கிழமை புளூம்பர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தோனீசிய அதிபர் கூறினார்.
ஜி20 மாநாடு நவம்பர் மாதம் நடக்கிறது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதர ஜனநாயக நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
சீன, ரஷ்ய அதிபர்களும் வருகிறார்கள் என்பதால், இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையில் காரசார சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்குப் பிறகு முதன் முறையாக எல்லா தலைவர்களும் நேரடியாக பாலியில் சந்திக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் உக்ரேனிய அதிபரும் கலந்துகொள்ளும் திட்டமிருக்கிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபரும் உக்ரேன் அதிபரும் நேருக்குநேர் சந்திக்கக்கூடிய நிலையும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பதற்றம் கூடி வரும் நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகளையும் ஜி20 ஏற்படுத்தி தரக்கூடும்.
உக்ரேன் மீது போர் தொடுத்த காரணத்தினால் ஜி20 கூட்டத்தில் ரஷ்யாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் கோரியிருந்தார்.
ஜி20 கூட்டத்தை இந்தோனீசியா ஏற்று நடத்துகிறது. வல்லரசுகளுக்கு இடையில் சமநிலையைக் காண இந்தோனீசியா விரும்புவ தாக அதன் அதிபர் தெரிவித்து உள்ளார். ஆகையால், ஜி20 கூட்டத்தில் ரஷ்யாவுக்கு தடை விதிக்க இந்தோனீசியா மறுத்து வருகிறது.

