நிதியுதவிக்கு 28,000 ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்

நிதியுதவிக்கு 28,000 ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்

1 mins read
d5344ebf-97d3-4a41-90d7-374f83310bb6
ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் கல்வி உதவிநிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் துணை பொதுச் செயலாளர் டெஸ்மண்ட் டான் (வலது) திட்டத்தைப் பற்றி அறிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுமார் 28,000 குறைந்த வருமான ஊழியர்கள் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் வழங்கும் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.

அதற்கு வகைசெய்யும் திட்டத்திற்குத் தகுதிபெறும் ஒவ்வொரு நபருக்கும் 150 வெள்ளி வரை நிதியுதவி வழங்கப்படும்.

பணவீக்கத்தினால் உயரும் செலவைச் சமாளிக்க குறைந்த வருமான ஊழியர்களுக்கு உதவுவது திட்டத்தின் இலக்கு.

ஒருவரின் வருமானமும் அவர் குடும்பத்துடன் வசிக்கிறாரா இல்லையா ஆகிய விவரங்கள் கருத்தில்கொள்ளப்பட்டு அவர் 3.7 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள என்டியுசி கேர் ஃபண்ட் (சிறப்பு உதவி) திட்டத்திற்குத் தகுதிபெறுவாரா என்பது நிர்ணயிக்கப்படும்.

அதையொட்டியே அவருக்கு வழங்கப்படும் உதவித் தொகையும் முடிவுசெய்யப்படும்.

மேலும், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

குடும்பத்தாருடன் வாழும் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கான குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானம் 3,400 வெள்ளிக்கு உட்பட்டிருந்தால் அவருக்கு 150 வெள்ளி நிதியுதவி கிடைக்கும்.

1,500 வெள்ளிக்கும் குறைவான சம்பளத்தைப் பெறும் தனியாக வாழ்பவருக்கு 60 வெள்ளி நிதியுதவி வழங்கப்படும்.

வரும் திங்கட்கிழமை (22 ஆகஸ்ட்) முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிவரை https://ucare.ntuc.org.sg/assistance/ எனும் இணையத்தளத்தில் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

சனிக்கிழமையன்று (20 ஆகஸ்ட்) நடந்த ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் கல்வி உதவிநிதி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் துணை பொதுச் செயலாளர் டெஸ்மண்ட் டான் திட்டத்தைப் பற்றி அறிவித்தார்.