உலக உணவுத் திட்டத்தைப் பொறுத்தவரை, 45 நாடுகளில் 50 மில்லியன் பேர்வரை உணவுப் பஞ்சத்தால் வாடுகின்றனர். மனிதாபிமான ஆதரவின்றி, கடும் உணவுப் பற்றாக்குறையால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
"ஆஃப்கானிஸ்தான், எத்தியோப்பியா, சோமாலியா, தென் சூடான், ஏமன் ஆகிய ஐந்து நாடுகளில் பஞ்சத்தால் 880,000க்கும் அதிகமானோர் உயிர்வாழப் போராடுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைவிட இது 10 மடங்கும் அதிகமாகும்," என்று உலக உணவுத் திட்ட வட்டாரத் தொடர்பு அதிகாரி அலெக்ஸான்ட்ரோ அபோனிஸியோ, கென்யாவில் இருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஜிபோட்டெ, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா ஆகிய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இதுவரை ஏழு மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் மடிந்தன.
மனிதாபிமான நிவாரண உதவி உடனடியாக கிடைக்கவில்லை என்றால், வறட்சியால் உணவுப் பற்றாக்குறை காரணமாக 20 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படக்கூடும் என்று திரு அபோனிஸியோ குறிப்பிட்டார்.
"உயிர் பிழைக்க குடும்பங்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். வறட்சி காரணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 1.1 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த வட்டாரத்தில் ஏழு மில்லியன் சிறார்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் அவதியுறுகின்றனர். சோமாலியாவில் மட்டும் ஐந்து வயதுக்குக்கீழ் உடைய சிறார்களில் 1.5 மில்லியன் பேருக்கு ஆண்டிறுதிக்குள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது, நாட்டில் உள்ள அனைத்து சிறார்களில் 45 விழுக்காடாகும்," என்று திரு அபோனிஸியோ விவரித்தார்.
நிதி வழங்கீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் எவருக்கு உதவுவது, எவர் பட்டினியாக இருப்பது என்பதை முடிவெடுக்கும் நிலைக்கு உலக உணவுத் திட்டம் தள்ளப்பட்டு உள்ளது.
எடுத்துக்காட்டாக, சோமாலியாவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்குப் பதிலாக அதைத் தீர்ப்பதில் உலக உணவுத் திட்டம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், சோமாலியாவில் பசி, பட்டினி காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனிதாபிமான உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன. என்றாலும், அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
சோமாலியாவில் பட்டினி காரணமாக உயிரிழந்தோர் குறித்து அதிகாரபூர்வ எண்ணிக்கை தற்போது வெளியிடப்படவில்லை. எனினும், நிலவரம் மோசமடைவதற்கு துயர் துடைப்பு ஊழியர்கள் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர்.
அந்நாட்டில் பொதுவாக மழைக்காலம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கும். ஆனால், தொடர்ந்து நான்கு பருவங்களாக அங்கு போதிய மழை பெய்யவில்லை.

